புதுவையில் 2 முக்கிய சாலைகளுக்கு கருணாநிதி பெயர்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுவை அமைச்சரவை
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.


புதுச்சேரி, காரைக்காலில் உள்ள இரு முக்கிய சாலைகளுக்கும், காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஆர்.கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதித் துறைச் செயலர் கந்தவேலு, வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் 27 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழைப் போற்றும் வகையில், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை - ராஜீவ் காந்தி சிலை இடையிலான சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை' என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம். 
அதேபோல, காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச் சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற்படிப்பு மையத்துக்கும் டாக்டர் கலைஞர்' பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளோம். மேலும், புதுவை பல்கலை.யில் கருணாநிதி பெயரில் ஓர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். 
ஏனாம் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் பாதிப்பு உண்டானது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இடைக்கால நிவாரணமாக தலா ரூ.3000 வழங்கப்படும். புதுச்சேரி அருகேயுள்ள சின்னையாபுரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த இடத்தை ஏழை மக்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால், அங்கு தற்போது இடத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஏழைகள் வாங்கும் விதத்தில் அந்த இடத்தை குறைந்த விலையில் வாங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இது குறித்த இறுதி முடிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். 
காமராஜர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 32,500 பேர் நிதியுதவி பெற்றுள்ளனர். இவர்களில், 28,800 பேர் வீடு கட்டி முடித்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளைக் கட்டி முடிக்காமல் உள்ளனர். 
வீடுகளைக் கட்டாதவர்கள் அரசு வழங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்தலாம். திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக ரூ.3 ஆயிரம் செலுத்தினால் போதும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஸ்டாலின் நன்றி: புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு முக்கியமான சாலைகளுக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட உள்ளதற்காக அந்த மாநில முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com