இன்று சதுர்த்தி விழா: சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் 2,500 சிலைகள் இந்து இயக்கங்களின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் இந்து முன்னணி சார்பில் 300 கிலோ முறுக்கு, தட்டை, அதிரசம், அப்பம், தேங்குழல், மனோகரம், ஜாங்கிரி என 7 வகை இனிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள 10 அடி உயரமுள்ள விநாயகர்
தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் இந்து முன்னணி சார்பில் 300 கிலோ முறுக்கு, தட்டை, அதிரசம், அப்பம், தேங்குழல், மனோகரம், ஜாங்கிரி என 7 வகை இனிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள 10 அடி உயரமுள்ள விநாயகர்


விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் 2,500 சிலைகள் இந்து இயக்கங்களின் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை (செப்டம்பர் 13) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து இயக்கங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதற்காக கடந்த பல வாரங்களாக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள், பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட 15 இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் தவிர்த்து குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு காவல்துறையிடம் இந்து அமைப்பினர் முறைப்படி அனுமதி பெற்று வருகின்றனர். இந்தாண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு புதிய சில விதிமுறைகளை விதித்ததுள்ளது. இது இந்து இயக்கத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
புதிய விதிமுறைகளின் படி வருவாய்துறை, உள்ளாட்சித் துறைகளின் தடையில்லா சான்றிதழ், தீயணைப்புத்துறை சான்றிதழ், மின்சார வாரியத்திடம் தற்காலிக மின் இணைப்புக்கு அனுமதி போன்ற விதிமுறைகள் கடுமையாக இருப்பதாக இந்து இயக்கத்தினர் கருத்து தெரிவித்து வந்தனர்.
காவல்துறை கட்டுப்பாடு: அதேவேளையில், பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 5 அடி உயரத்தில் இருந்து 10 அடி உயரத்துக்குள் இருக்க வேண்டும், களி மண்ணால் செய்யப்பட்டவைகளாக இருக்க வேண்டும், வேதிப் பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது, அனுமதி பெற்ற இடத்திலேயே விநாயகர் சிலையை வைக்க வேண்டும், ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருக்கக் கூடாது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது, சிலைகளைப் பாதுகாக்க, விழாக் குழு சார்பில் சிலைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என காவல் துறை சார்பில் 19 விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைக்கு உட்பட்டாலே சிலைகளை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு காவல்துறையால் அனுமதி வழங்குகிறது.
2,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு கடந்தாண்டுபோலவே இந்தாண்டும் காவல்துறையிடம் விண்ணப்பித்தனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறையின் உயர் அதிகாரி கூறியது:
சென்னையில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக் கேட்டு 2,640 விண்ணப்பங்கள் வந்தன. அந்த விண்ணப்பங்கள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றில் தகுதியுடை 2,500 விண்ணபங்கள் ஏற்கப்பட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளன. தகுதியில்லாத சுமார் 140 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்னும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக் கேட்டு, விண்ணப்பங்கள் வருகின்றன என்றார் அவர்.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் பதற்றமான பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதேபோல விழாக்குழுவால் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு குழுவினரும், சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். சிலைகள் கரைக்கப்படும் இரு நாள்களும், கூடுதல் பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களில் போலீஸார் வரவழைக்கப்படுகின்றனர். விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும், ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கரைக்கும் இடத்தை சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
கடலில் கரைப்பு
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளில் பெரும்பாலானவை, இம் மாதம் 15,16,17 ஆம் தேதிகளில் கடலில் கரைக்கப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 16-ஆம் தேதி கடலில் கரைக்கப்படுகின்றன. இதில் 16-ஆம் தேதி மட்டும் சுமார் 2,300 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். சமூக அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள் 13-ஆம் தேதியில் (வியாழக்கிழமை) இருந்தே சிலைகளை கடலில் கரைக்க திட்டமிட்டுள்ளன.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது. இதற்காக ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், சிலைகளை கரைக்கும்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராகள் பொருத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com