ஏழு பேர் விடுதலை விவகாரம்: மக்களின் உணர்வை அறிந்து ஆளுநர் முடிவு எடுப்பார்- அமைச்சர் டி.ஜெயக்குமார்

ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மக்களின் உணர்வை அறிந்து ஆளுநர் புரோஹித் முடிவெடுப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மேடை அமைப்பதற்கான கால்கோள் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள்
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மேடை அமைப்பதற்கான கால்கோள் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள்


ராஜீவ் கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மக்களின் உணர்வை அறிந்து ஆளுநர் புரோஹித் முடிவெடுப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் இந்த விழாவின் பந்தலுக்கான கால்கோள் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வம் விழாவுக்கு கால்கோள் நாட்டினார்; விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், சரோஜா, ஜெயக்குமார், துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்த்திருத்தத் துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் எழுச்சி மிகுந்த விழாவாக நடைபெற இருக்கிறது. சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகம் இதுவரை கண்டிராத விழாவாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா திகழும்.
இந்த விழாவில், அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என 5 லட்சம் பேர் பங்கேற்பர். எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அது போன்று எல்லா சாலைகளும் சென்னையை நோக்கி வரும் 30-ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திரளும்.
இதுவரை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் ரூ.50,000 கோடிக்கு மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பல மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்ட மக்களுக்கு என்னென்ன வசதிப்படுமோ அதைச் செய்ய தயாராக இருக்கிறோம். அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.
இடைத் தேர்தல்கள்: திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மட்டும் அல்ல. இனி வரும் மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் அனைத்திலும் அதிமுகவே வெற்றி பெறும். அந்த அளவுக்கு 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆண்ட கட்சியே மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வரலாறு அதிமுகவுக்கு உண்டு.
தமிழகத்தைப் பொருத்தவரை எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆளுமையில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. போக்குவரத்து வசதியிலும் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு அடிப்படை தேவைகள் இருக்கின்றன. ஒன்று அமைதி. அடுத்தது கட்டமைப்பு வசதி. மக்கள் எந்தப் பிரச்னையுமின்றி நிம்மதியாக வாழும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. எனவே, உறுதியாகச் சொல்கிறேன். இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெறும்.
தேர்தல் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். அதற்கு இது சரியான தருணமல்ல.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தான் எந்தத் தவறும் செய்ய வில்லை. தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கத் தயாராக உள்ளேன், நிரூபித்தால் அரசியலில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் விலகத் தயார் என்று சவால் விடுத்துள்ளார். இந்தச் சவாலை ஏற்க திமுக தயாராக இருக்க வேண்டும். அதுதான் சவாலுக்கு சவாலாக இருக்க முடியும்.
நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார்: எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஆளுநரிடம் எடுத்துரைத்துள்ளோம். சிறைத் துறையும் பரிந்துரைத்துள்ளது. அவர்களின் நற்சான்றிதழ் குறித்த அறிக்கையையும் அனுப்பி இருக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து தகுந்த நேரத்தில் ஆளுநர் நல்ல முடிவை மேற்கொள்வார் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com