பரிவார் டைரீஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

தமிழகத்தில் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்த பரிவார் டைரீஸ் நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.


தமிழகத்தில் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்த பரிவார் டைரீஸ் நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த ஆர்.செல்வகணேசன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ராஜேந்திரன், மகாலிங்கம், நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:
மத்தியபிரேதசம் மாநிலம் குவாலியரை தலைமையிடமாக கொண்டு பரிவார் டைரீஸ் அன்ட் அலைடு என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2007 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மத்திய அரசின் செபி, ஆர்பிஐ போன்றவற்றில் உரிமம் பெற்றதாக பொய்யான தகவல்களை பரப்பினர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் பணத்தை திரும்பத் தருவதாக இந்த நிறுவன வளர்ச்சி அலுவலர் மதுரையை சேர்ந்த ஆர்.தெய்வம் பொதுமக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பினார். இதை நம்பி 2000-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2010 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை சேர்ந்த ஆர்.எஸ்.நர்வாரியா, ஷர்மா ஆகியோர் மதுரையில் கூட்டம் நடத்தி பலரிடம் தொகையை வசூலித்தனர். இந்நிறுவனம் விருதுநகர் மாவட்டத்திலும் தனது கிளையை தொடங்கியது. பின்னர் இதுதொடர்பாக விசாரித்ததில், இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டு மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை மறைத்து தமிழகத்தில் மாற்று பெயருடன் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
2014 ஆம் ஆண்டு முதல் முதலீட்டார்களுக்கு முதிர்வு தொகை தருவதில் இழுபறி ஏற்பட்டது. பின்னர் 2015 இல் விருதுநகர் கிளை அலுவலகம் மூடபட்டது. மதுரை, தேனி, சென்னை உள்ளிட்ட 12 கிளைகள் மூடப்பட்டு தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி வரை மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக பரிவார் டைரீஸ் அன்ட் அலைடு நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2015 இல் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, பரிவார் டைரீஸ் நிதி நிறுவனம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com