சிக்னலில் நிற்காமல் போகாதீர்கள்.. உங்களுக்கு என ஒரு வரலாறே உருவாகப் போகிறதாம்!

சாலையில் இருக்கும் சிவப்பு விளக்கை மதிக்காமல் நாம் சாலையைக் கடந்து சென்றால் என்னவாகிவிடப் போகிறது என்று ஒருவர் நினைத்தால் அது இனி தவறாகிப் போய்விடும்.
சிக்னலில் நிற்காமல் போகாதீர்கள்.. உங்களுக்கு என ஒரு வரலாறே உருவாகப் போகிறதாம்!


சென்னை: சாலையில் இருக்கும் சிவப்பு விளக்கை மதிக்காமல் நாம் சாலையைக் கடந்து சென்றால் என்னவாகிவிடப் போகிறது என்று ஒருவர் நினைத்தால் அது இனி தவறாகிப் போய்விடும்.

ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் என ஒரு குற்ற வரலாற்றுப் பதிவு (History Sheet) உருவாக்கப்பட்டு, அதில் சின்ன சின்ன சாலை விதி மீறல்களும் பதிவு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

ஒரு வாகன ஓட்டி செய்யும் அனைத்து சாலை விதி மீறல்களும் அந்த ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்படும்.

பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம், ஒரே அட்டை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. போக்குவரத்துத் துறை முழுவதும் மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே ஒரே தேசம் ஒரே அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகம் தெரிவித்திருந்தது.

இந்த ஸ்மார்ட் அட்டையில், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீடு விவரம் என அனைத்தும் பதிவாகும். ஸ்மார்ட்கார்டில் இருக்கும் சிப்பில் இந்த தகவல்கள் பதிவு செய்யப்படும். 

முதற்கட்டமாக புதிதாக ஓட்டுநர் உரிமம் கோருவோருக்கு இந்த ஸ்மார்ட் அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே அட்டையில், சாலை விதிகளை மீறியது, அவர்கள் கட்டிய அபராதத் தொகை, அவர்கள் செய்த குற்றத்தின் நிலை போன்றவையும் பதிவேற்றம் செய்து, ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் ஒரு தகவல் பதிவு பராமரிக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையர் சி. சமயமூர்த்திக் கூறியுள்ளார்.

இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போக்குவரத்துக் காவலர்களுக்கு கையடக்க கணினி எனப்படும் 'டேப்'கள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்களை படித்து வாகன ஓட்டிகளின் குற்ற வரலாற்றை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில், அதிக ஆட்களை, பொருட்களை ஏற்றிச் செல்லுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் போன்ற அனைத்து விதி மீறல்களும் பதிவு செய்யப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com