தினமணி செய்தி எதிரொலி: புழல் சிறையில் சொகுசு அறைகளில் இருந்து 18 டிவி, ரேடியோக்கள் பறிமுதல்

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், புழல் சிறையில் கைதிகள் சொகுசு வசதிகளுடன் இருப்பதாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.
தினமணி செய்தி எதிரொலி: புழல் சிறையில் சொகுசு அறைகளில் இருந்து 18 டிவி, ரேடியோக்கள் பறிமுதல்


சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், புழல் சிறையில் கைதிகள் சொகுசு வசதிகளுடன் இருப்பதாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.

இந்த நிலையில், புழல் சிறையில் சிறைத் துறை டிஐஜி முருகேசன் தலைமையிலான காவல்துறையினர், அதிரடி சோதனை நடத்தி, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 18 டிவி, 2 ரேடியோக்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக சிறைத் துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், குறிப்பிட்ட சில கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படத்துடன் தினமணி நாளிதழில் கடந்த திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதில், சிறைக்குள் கைதிகள் சொகுசாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இது சிறைத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. 

இதற்கிடையே, கடந்த 3-ஆம் தேதி புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு 7 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இதில் கள்ளநோட்டு, கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு நபரிடமிருந்தும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு நபரிடம் இருந்தும் 2 ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளையும், ஒரு சாதாரண செல்லிடப்பேசியையும் பறிமுதல் செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை: இதை ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் சிறைக்குள் இருந்தபடி செல்லிடப்பேசி மூலம் பல்வேறு சமூக விரோதச் செயல்களை செய்து வந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த செல்லிடப்பேசிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர். சிறைத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், புழல் காவல் நிலையத்தில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களது செல்லிடப்பேசி தொடர்புகளைக் கண்டறியும் வகையில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறையில் திடீர் ஆய்வு: இந்நிலையில், புழல் சிறையில் சிறைத்துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
புழல் சிறையில் கைதி செல்லிடப்பேசியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒரு மாதம் முன்பு எடுக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இது குறித்து சிறையில் ஆய்வு செய்யப்பட்டு, செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வியாழக்கிழமையும் சிறையில் ஆய்வு நடத்தப்பட்டது. உரிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com