விநாயகர் சிலை பிரதிஷ்டையில் மோதல் எதிரொலி: செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைதொடர்ந்து செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை பிரதிஷ்டையில் மோதல் எதிரொலி: செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைதொடர்ந்து செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.  ஓம்காளி  விநாயகர் கமிட்டியின் சார்பில் முதல் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக  சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்  பல்வேறு பகுதிகள் வழியாக  ஊர்வலமாக எடுத்து வந்தனர். செங்கோட்டை மேலூரில் உள்ள கீழ பள்ளிவாசல் வழியாக சிலையை கொண்டு வந்தபோது,  அந்தப் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும்  சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் அமைதியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 

பின்னர் ஊர்வலம் புறப்பட்டபோது இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது  மண், கற்களை கொண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஊர்வலம் சென்றவர்களும்  சாலைகளில் கிடந்த கற்களை எடுத்து எதிர்தரப்பினர் மீது வீசியுள்ளனர். காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டது. 
இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

மேலும் அப்பகுதியில்  உள்ள சுமார் 4-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 10-க்கும் மேற்பட்ட கார்கள்,  3-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சேதமடைந்தன. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டினர். தொடர்ந்து இரு தரப்பினரும் குவிந்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைதொடர்ந்து செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். மத கலவரங்களை தூண்டும் வகையிலான செயல்கள் நடைபெறாமல் இருக்கவே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை காலை 6 மணி வரை இது அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இருதரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com