பசுமை வழிச் சாலை பணிகள் தற்காலிக நிறுத்தம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு
பசுமை வழிச் சாலை பணிகள் தற்காலிக நிறுத்தம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்


சென்னை சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலத்தின் உரிமையாளர்களை அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தியது தொடர்பான விவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தான் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மோகன், திட்டத்தை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், திட்டத்தை மாற்றம் செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை, மேலும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நடைபெறாது என்றார். 
இதைக் கேட்ட நீதிபதிகள், சட்ட விரோதமாக மரம் வெட்டிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆண்டி என்பவருக்கு 6 மரங்களை வெட்ட அனுமதியளித்தோம். ஆனால், அவர் சாலை அமையவுள்ள இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் உள்ள 25 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 109 மரங்களை வெட்டியுள்ளார். இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆண்டி, மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆண்டி மற்றும் மணிவண்ணனுக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கியிருக்கிறார். சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்ற இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய அரூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் வரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசாணையின் படி ஒரு மரம் வெட்டப்பட்டதற்கு பத்து மரங்கள் நடப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களை மாவட்ட வன அதிகாரி அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். சென்னை சேலம் பசுமை வழிச் சாலைத் திட்ட இயக்குநர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனுதாரர்கள் தங்களது நிலம் கையகப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு பணிகள் முடிவடையும் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com