எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி: ஸ்டாலின் பேச்சு

எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி: ஸ்டாலின் பேச்சு

எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 விழுப்புரத்தில் திமுக சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றியதாவது:
 கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதியை தமிழ் செம்மொழி நாளாகக் கடைப்பிடிப்போம். அவர் பெயரில் முத்தமிழறிஞர் அறக்கட்டளையைத் தொடங்கி, ஏழை நோயாளிகளுக்கு நிதியுதவி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, குடிமைப் பணி பயிற்சி மையத்தைத் தொடங்கி வெளிநாடு, உள்நாட்டுப் பணி வாய்ப்புகளை இளைஞர்கள் பெறும் வகையில் பயிற்சியளிக்கப்படும்.
 பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது, திராவிட இயக்கத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மூத்த, இளைய படைப்பாளிகளுக்கு திராவிட படைப்பாளர் விருதும், சிறப்பான கட்சிப் பணியாற்றி வரும் ஒன்றிய, நகர, பேரூர், மாவட்ட கழக செயலர்களுக்கு முத்தமிழ் அறிஞர் விருதும் இனி வழங்கப்படும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் கருத்துகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் தலைவராக கருணாநிதி இருந்தார். அவர் வகுத்துத் தந்த அரசியல், பண்பாட்டு வழியில் நான் செயல்படுவேன்.
 பொதுச்செயலர் அன்பழகன் தொடங்கி, கட்சியின் கடைசித் தொண்டனின் விருப்பத்திற்கேற்ப தலைவராக வந்துள்ளேன். கருணாநிதி தலைவராகப் பொறுப்பேற்றபோதுகூட அன்பழகன் ஏற்கவில்லையாம். அவரது பணியைப் பார்த்த பிறகே தலைவராக ஏற்றதாக கருணாநிதி சொன்னார். என்னைத் தேர்வு செய்ததற்கு ஏற்ப துணிச்சலுடன் செயல்படுவேன்.
 சுயமரியாதை, சமதர்மம், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்தைக் காப்பாற்ற, தற்போதுள்ள ஆட்சியை அகற்ற ஓய்வின்றி பணியாற்ற வேண்டும். மத்தியில் மதச் சார்பற்ற அரசை அமைக்க வேண்டும். பாசிஸ அரசாக மத்திய அரசு உள்ளது. மோடி அரசையும், அவர்களுக்கு அடிபணிந்த மாநில அரசையும் அகற்ற வேண்டும்.
 மாநில அரசை அடக்கி வைத்து ஆளுகிறது மத்திய அரசு. குட்கா, மணல் குவாரி, வாக்கி டாக்கி, பேருந்து ஊழல்கள் என ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. காவல் துறை தலைமை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெறுவது வெட்கக் கேடு.
 மோடிக்கு கேள்வி: பாஜக ஆட்சியின் சாதனைகளை விவாதிக்க மோடி அழைக்கிறார். கருப்புப் பணத்தை மீட்டு பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக அவர் கூறியது என்னாயிற்று? 10 கோடி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்னவாயிற்று? பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? தமிழகத்துக்கு நீட்தேர்வு விலக்கு கோரி அனுப்பிய தீர்மானம் என்ன ஆனது? ஆளுநர் மாளிகையை மாநில அரசைக் கண்காணிக்கும் கேமராவாக பயன்படுத்துவதுதான் மத்திய அரசின் வேலையாக உள்ளது.
 எதிர்வரும் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும். எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவுக்கு வெற்றி நிச்சயம். கருணாநிதி இருந்து சாதிக்க நினைத்ததை, அவரது மகன் சாதிப்பான். அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். ஊழல் ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலர வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com