செங்குன்றம் சுங்கச்சாவடியில் விடிய விடிய சோதனை: ரூ.1.15 லட்சம் அபராதம் வசூல்

சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில், கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் விடியவிடிய வாகனச் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் சுங்கச்சாவடியில், கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் விடியவிடிய வாகனச் சோதனை மேற்கொண்டனர். இதில் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
 தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துக்களில் 60 சதவீதம் விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில்தான் நடைபெறுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் சுங்கச்சாவடிகளில் ஆய்வு நடத்தி விதிமுறைகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலப் போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
 அதன்படி, சுங்கச் சாவடிகளில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி. அசோக்குமார் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் சரவணன், ரமேஷ் ஆகியோர் செங்குன்றத்தில் உள்ள சுங்கச் சாவடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.1.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
 இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் கூறியது: நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துக்களைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, செங்குன்றம் சுங்கச் சாவடியில் விடிய, விடிய மொத்தம் 183 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 சாலை விதிகளை மீறி வாகனங்களில் அதிக எடை, உரிய ஆவணங்கள் இல்லாதது, வரி செலுத்தாதது, ஹெல்மெட் அணியாதது என 34 பேர் மீது நடவடிக்கை எடுத்து சோதனை அறிக்கை அளித்துள்ளோம். 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com