தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: ஜக்கி வாசுதேவ்

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது: ஜக்கி வாசுதேவ்

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
 தூய்மையின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடக்கிவைத்தார்.
 இந்தத் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவும், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளும் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, "தூய்மையே சேவை' என்னும் பிரசாரத்தை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை மத்திய அரசு மேற்கொள்கிறது.
 இதன் ஒரு பகுதியாக, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் முக்கிய ஆளுமைகள், தன்னார்வக் குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் இருந்து பங்கேற்றார்.
 கலந்துரையாடலில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
 தூய்மை இந்தியா திட்டத்தால் கடந்த 4 ஆண்டுகளில் நமது தேசத்தில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
 தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கழிப்பறைகளைத் தமிழக அரசு கட்டிக் கொடுத்துள்ளது. பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டவும் அவற்றை சுத்தமாகப் பராமரிக்கவும் ரூ.60 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கழிவுநீர்க் கட்டமைப்பு பயன்பாட்டில் இருந்ததை பிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 அப்போது, இதுபோன்று வேறு எந்தக் கலாசாரத்திலும் கழிவு நீர்க் கட்டமைப்பு முறை பயன்படுத்தப்படவில்லை. இப்போதும் கூட நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் குளிக்காமல் உணவு அருந்துவது கிடையாது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு படையெடுப்புகளால் நமது நாடு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது.
 இதனால், நமது தேசத்தில் 20 தலைமுறைகளில் பொது சுகாதாரம் என்பது பெரிய அளவில் மறைந்துபோய்விட்டது.
 இந்நிலையில், நமது நாட்டை முன்பைப் போலவே தூய்மையான தேசமாக மாற்ற, தூய்மை இந்தியா திட்டம் உறுதுணையாக இருக்கும். ஈஷா அறக்கட்டளை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகள், 37 சிறு நகரங்களில் பொதுமக்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.
 இதைத் தொடர்ந்து, சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
 தூய்மைப் பணி என்பது கடவுளுக்கு செய்யும் சேவையைப் போன்றது. தூய்மை இந்தியா இயக்கத்தை அரசின் இயக்கமாகவோ, பிரதமரின் இயக்கமாகவோ கருதாமல், மக்கள் இயக்கமாகவே கருத வேண்டும்.
 நமது நதிகளைத் தூய்மைப்படுத்த நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தூய்மை இந்தியா திட்டத்துக்கும் வலு சேர்க்கும் என்றார்.
 நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மத்திய நீர், சுகாதாரத் துறை இணைச் செயலர் அருண் பரோகா, கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நடிகர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com