தாமிரவருணி புஷ்கர விழா: ஆளுநர், காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

திருநெல்வேலியில் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள ஸ்ரீமாதா தாமிரவருணி புஷ்கரம் பூஜை விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர்
தாமிரவருணி புஷ்கர விழா: ஆளுநர், காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு

திருநெல்வேலியில் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள ஸ்ரீமாதா தாமிரவருணி புஷ்கரம் பூஜை விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக, வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
 தாமிரவருணி புஷ்கரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் பங்கேற்று, தாமிரவருணி புஷ்கர பூஜைகள் தொடர்பாக இந்து அமைப்பு பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
 பின்னர், சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாமிரவருணி ஆறு தென்பொதிகையில் உற்பத்தியாகி 126 கிலோ மீட்டர் பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும், தலபுராணங்களிலும் தாமிரவருணியின் சிறப்பும், பெருமையும் விளக்கப்பட்டுள்ளது. தாமிரவருணியானது 143 படித்துறைகள், 64 தீர்த்த கட்டங்களைக் கொண்டுள்ளது. சங்கரமடத்தின் இரண்டாவது பீடாதிபதி, காசி மடம் குமரகுருபரர் உள்ளிட்ட பல அருளாளர்கள் தாமிரவருணிக்கரையில் பிறந்துள்ளனர். தாமிரவருணியை காக்கும் வகையிலும், அதன் பெருமையை பொதுமக்கள் புரிந்து கொண்டு போற்றும் வகையிலும் ஸ்ரீமாதா தாமிரவருணி புஷ்கரம் பூஜைகள் நடத்தப்படவுள்ளன. அதன் தொடக்க விழா அக்டோபர் 12 ஆம் தேதி காலையில் திருநெல்வேலி ரயில்வே சந்திப்பு அருகேயுள்ள தைப்பூச மண்டபத்தில் நடைபெறுகிறது.
 தொடக்கமாக நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சைவ குரு மஹாசன்னிதானங்கள், ஸ்ரீவைஷ்ணவ ஜீயர் சுவாமிகள் மற்றும் தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமுறை பாராயணம், வேதபாராயணம், தாமிரவருணி ஆரத்தி, ருத்ரஜெபம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகின்றன. தாமிரவருணியில் 16 இடங்களில் புஷ்கர விழா பூஜைகள், சீரமைப்புப் பணிகள் நடத்தப்படவுள்ளன. இதில் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் ஈடுபடுகின்றனர்.
 அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் தைப்பூச மண்டப சீரமைப்புப் பணிகளும் தொடங்கப்படுகிறது. தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வரும், துணை முதல்வரும் சம்மதித்துள்ளனர். அவர்கள் தாமிரவருணி புஷ்கர பூஜைகளில் ஒரு நாள் நிச்சயம் பங்கேற்பதாகவும் கூறியுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com