முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் திட்டம்: பூமி பூஜையை தடுத்து விவசாயிகள் முற்றுகை

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக சனிக்கிழமை நடைபெற இருந்த பூமிபூஜையை தடுத்து, அதில் கலந்து கொள்ள

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்காக சனிக்கிழமை நடைபெற இருந்த பூமிபூஜையை தடுத்து, அதில் கலந்து கொள்ள வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
 முல்லைப் பெரியாறு அணையில் லோயர்கேம்ப்பில் இருந்து கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம், பண்ணைப்புரம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், இங்கிருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டு கடந்தாண்டு ரூ.1,550 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இத் திட்டத்தை செயல்படுத்த லோயர்கேம்ப்பில் உள்ள முல்லை பெரியாற்றங்கரையில் சனிக்கிழமை பூமிபூஜை செய்ய உத்தமபாளையம் நீர்ப்பாசன பிரிவு கோட்ட பொறியாளர் அன்புசெல்வன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த முல்லை பெரியாறு பாசன விவசாய சங்க நிர்வாகிகள் ராஜீவ், செந்தில், பெரியாறு பாசன விவசாய சங்க நிர்வாகி ஜெயபால் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் திரண்டு, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அனைத்து விவசாய சங்க நிர்வாகி செங்குட்டுவன் மற்றும் விவசாயிகள் கூறுகையில், இங்கிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும். தேவையென்றால் வைகை அணையிலிருந்து நீர் எடுத்து செல்லுங்கள், மறுத்தால் மக்களை திரட்டி போராடுவோம். லோயர்கேம்ப்பில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
 பின்னர், பேச்சுவார்த்தையின் போது பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் அன்புசெல்வன் கூறியது: விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும். பூமிபூஜைகள் தற்போது நடத்தப்படவில்லை. அதிகாரிகள் அனைவரும் திரும்பச் செல்கிறோம் என்றார். இதையடுத்து பூமிபூஜை செய்ய வந்த அதிகாரிகள் அனைவரும் லோயர்கேம்ப்பில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
 விவசாயிகள் எதிர்ப்பு: மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றங்கரையில் நீரேற்று நிலையம் அமைத்து, சுரங்கம் மூலம் 100 கன அடி தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை அதிகாரிகள் நடத்தினர். அதில் இத்திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com