சந்திரயான்-2: 2019 ஜனவரி 3-இல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-2 செயற்கைக்கோள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறினார்.
சந்திரயான்-2: 2019 ஜனவரி 3-இல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-2 செயற்கைக்கோள் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் கூறினார்.
 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவன் அளித்த பேட்டி:-
 இஸ்ரோ அடுத்து தொடர்ச்சியாக மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப உள்ளது. 3.5 டன் எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 அதற்கடுத்து ஜிசாட்11ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. அதுபோல ஜிசாட்11, ஜிசாட்20 ஆகிய செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
 மிக முக்கியமான சந்திரயான்-2 செயற்கைக்கோள் 2019 ஜனவரியில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 3 முதல் பிப்ரவரி 16 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஜனவரி 3-இல் அனுப்பப்பட்டு விடும்.
 இஸ்ரோ மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு மாறாக சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில், கூடுதலாக இரண்டாவது ராக்கெட் ஏவும் அமைப்பு ஒன்றை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுபோல முதல் ஏவு தளத்தில் அமைக்கப்படும்.
 ரூ. 220 கோடி வருவாய்: இப்போது பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் பிரிட்டன் நிறுவனத்தின் இரண்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் விண்ணுக்கு அனுப்பியதன் மூலம் இஸ்ரோவுக்கு ரூ. 220 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
 தொடர்ந்து இதே போன்று வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. வரும் நவம்பரில் அனுப்பப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளின் 30 சிறிய செயற்கைக்கோள்களும் சேர்த்து அனுப்பப்பட உள்ளன.
 இரண்டு வாரத்துக்கு ஒரு ராக்கெட்
 ராக்கெட்டிலிருந்து செயற்கைக்கோள் பிரிக்கப்பட்டு திட்டமிட்ட தற்காலிக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், சக விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். பின்னர் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:
 இரவு நேரத்தில் ராக்கெட் வெற்றிகரமாக அனுப்பப்பட்டு, திட்டமும் வெற்றியடைந்திருப்பது இஸ்ரோவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய மற்றும் வித்தியாசமான வெற்றி. இந்த வெற்றி மூலம் அனைத்து கால நிலைகளிலும், நேரத்திலும் வெற்றிகரமாக அனுப்பக் கூடிய ராக்கெட் பி.எஸ்.எல்.வி. என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கூடுதல் ஊக்கத்தை அளித்திருக்கிறது.
 இந்த ஆண்டில் மேலும் அதிக திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. அடுத்த 6 மாதங்களில் 8 ராக்கெட்டுகளும், 10 செயற்கைக்கோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன என்றார் சிவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com