தமிழக எல்லைப் பகுதியில் தடுப்பணைகள் சேதம்: கேரளக் கடல் கலந்து வீணாகும் மழை நீர்

கோவையை அடுத்த தமிழக எல்லைப் பகுதியான மதுக்கரையைச் சுற்றிலும் உள்ள 8 தடுப்பணைகள் உடைந்துள்ளதால் பல லட்சம் லிட்டர் மழை நீர் வீணாகி கேரளக் கடலில் கலக்கிறது.
தமிழக எல்லைப் பகுதியில் தடுப்பணைகள் சேதம்: கேரளக் கடல் கலந்து வீணாகும் மழை நீர்

கோவை: கோவையை அடுத்த தமிழக எல்லைப் பகுதியான மதுக்கரையைச் சுற்றிலும் உள்ள 8 தடுப்பணைகள் உடைந்துள்ளதால் பல லட்சம் லிட்டர் மழை நீர் வீணாகி கேரளக் கடலில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
 கோவை மாவட்டத்தை ஒட்டிய, தமிழக எல்லைப் பகுதிகளான சுகுணாபுரம், குரும்பபாளையம், மதுக்கரை, பச்சாபாளையம், காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 8 தடுப்பணைகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைப்பு ஏற்பட்டன. இந்தத் தடுப்பணைகளின் உடைப்புகளில் இருந்து வெளியேறும் மழை நீரானது சுமார் 20 கிலோ மீட்டர் சென்று, கேரளப் பகுதியில் உள்ள பாரதப்புழா ஆற்றில் கலந்து, பொன்னானி என்ற இடத்தில் அரபிக் கடலில் கலந்து வீணாகிறது.
 கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்கள் முழுமையாகப் பராமரிக்கப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும் நீரை சேமிக்க முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வேளையில், கோவையை அடுத்த அறிவொளி நகர் பகுதியில் உள்ள ஓடையிலிருந்து வரும் மழை நீர் சுகுணாபுரம், குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள 4 தடுப்பணைகளில் சேமிக்கப்பட்டு வந்தது. இந்தத் தடுப்பணைகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை.
 நீண்ட காலமாக, மழைக் காலங்களில் ஓடைகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீரைத் தடுப்பணைகளில் சேமித்து வைத்து, அப்பகுதியினர் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கன மழையால் தடுப்பணைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இந்த உடைப்புகளை சீரமைக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால், மதுக்கரையைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் விவசாயம் முழுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
 இந்தப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்க சுமார் ஆயிரம் அடிக்குத் துளையிட்டால் மட்டுமே நீர் வரும் என்ற அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
 அண்மையில் பெய்த தென் மேற்குப் பருவ மழை நீரையும், இந்தத் தடுப்பணைகளில் உள்ள உடைப்பு காரணமாக சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், ஈச்சனாரி தடுப்பணை, முத்துநகர் தடுப்பணை, பச்சாபாளையம் தடுப்பணை, காளியாபுரத்தில் உள்ள தடுப்பணையிலும் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் மழை நீர் வீணாகி கேரளப் பகுதிக் கடலில் கலக்கிறது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 இதுகுறித்து, குரும்பபாளையத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளிங்கிரி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் உள்ள 3 தடுப்பணைகளால் இந்தப் பகுதியில் விவசாயம் செழிப்பாக இருந்தது. ஆனால், சில ஆண்டுகளாகத் தடுப்பணைகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மழை காலத்தில் வரும் நீர் முழுவதுமாக வெளியேறி வருகிறது. இதனால் மதுக்கரை, குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட், பாலத்துறை போன்ற கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே, தடுப்பணைகளில் உள்ள உடைப்புகளைச் சீரமைத்து மழை நீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 இதுகுறித்து மதிமுக இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் கூறுகையில், தமிழக அரசு சார்பில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்கப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிப்பு மட்டுமே வருகிறது. நாட்டின் முக்கிய வளர்ச்சியே விவசாயம் என்று கூறும் அரசு இதுவரையில் நீர் நிலைகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 தமிழகத்தின் உயிர் நாடியான விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், தடுப்பணைகள், ஏரி, குளங்களைப் புனரமைத்து மழைக் காலங்களில் நீரை சேமித்து, விவசாயத்துக்குப் பயன்பட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 -ஆர். தர்மலிங்கம்
 படங்கள்: டி. முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com