தமிழக சிறைகளில் அதிரடி சோதனை: தினமணி செய்தி எதிரொலி

சென்னை, புழல் சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை நடத்தியதை அடுத்து அங்கு நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து,
தமிழக சிறைகளில் அதிரடி சோதனை: தினமணி செய்தி எதிரொலி

சென்னை, புழல் சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை நடத்தியதை அடுத்து அங்கு நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர் மத்தியச் சிறைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
 புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், குறிப்பிட்ட சில கைதிகளிடம் சிறைத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த திங்கள்கிழமை (செப்.10) செய்தி வெளியானது.
 இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் சிறைத் துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அங்கு இரு தினங்கள் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் சிறை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், படுக்கைகள், திரைச்சீலைகள், சமையல் பாத்திரங்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் என ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
 அதன் தொடர்ச்சியாக சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்திய சிறைக் கைதிகள் முகம்மது ரபீக் (30), முகம்மது இப்ராஹிம் (எ) ராஜா (38), முகம்மது ரிக்காஸ் (எ) ரிக்காஸ் (29), முகம்மது ஜாகீர் (47), ரபீக் (எ) நூருதீன் (28) ஆகியோர் வேறு மத்தியச் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
 புழல் சிறை சோதனையைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர் மத்தியச் சிறைகளில் மாநகர காவல் துறையினரும், சிறைத் துறையினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 கோவை சிறையில்...: கோவை மத்தியச் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என மொத்தம் 1,800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
 இந்த சிறையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் சிறைத் துறை டிஐஜி அறிவுடைநம்பி, சிறைக் கண்காணிப்பாளர் எம்.செந்தில்குமார், மாநகரக் காவல் உதவி ஆணையர் சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் 95 பேர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. இதில், கைதிகளின் அறைகளில் இருந்து பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
 சேலம் சிறையில்...: சேலம் மத்திய சிறையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் காலை 6 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இச்சோதனையில், தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று காவல் துறை தெரிவித்தது.
 கடலூர் சிறையில்...: கடலூர் மத்திய சிறையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் என சுமார் 900 பேர் உள்ளனர். இங்கு கடலூர் உள்கோட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜோ.லாமேக் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் த.கி.சரவணன், ஏழுமலை, 13 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 130 பேர் கொண்ட குழுவினரும், சிறைத் துறை காவலர்கள் 30 பேரும் இணைந்து காலை 6 மணியளவில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் எந்த தடை செய்யப்பட்ட பொருளும் சிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
 புழல் சிறையில் பட்டியல் தயாரிப்பு: சென்னை புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், பீடி, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்துவோர், சிறையில் கைதிகளுக்கான சீருடை அணியாமல், வழக்கமான உடைகளில் இருந்தோர், சொகுசு வாழ்க்கையில் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
 இதைத் தொடர்ந்து அக்கைதிகள் வேறு சிறைகளுக்கு விரைவில் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 விதிகளின்படியே கைதிகளுக்கு வசதி
 சிறை விதிகளின்படியே கைதிகளுக்கு வசதிகள் அளிக்கப்படுகின்றன என்று சட்டம், சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது:
 முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக் கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி தங்களின் அறைகளில் கைதிகள் வண்ணம் பூசிக் கொள்ளலாம். சிறையின் உள்ளே கலைகள் வரைய படிக்கும் கைதிகள், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் இதுபோல வரைந்து கொள்கின்றனர். சில அதிகாரிகளின் உதவியுடன் செல்லிடப்பேசிகள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றார் அமைச்சர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com