முல்லைப் பெரியாறு இரண்டாவது சுரங்கப் பாதை தீர்வாகுமா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அணையிலிருந்து கூடுதலான தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிட இரண்டாவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்
முல்லைப் பெரியாறு இரண்டாவது சுரங்கப் பாதை தீர்வாகுமா?

மதுரை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அணையிலிருந்து கூடுதலான தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிட இரண்டாவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 கேரள அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தாலும், தற்போதைய அம்மாநிலத்தின் வெள்ள சூழ்நிலையை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக நீர் மேலாண்மை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்குப் பருவ மழை பெய்து பெருத்த வெள்ளச் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்தில் உள்ள 39 அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. அம்மாநில எல்லைக்குள்ளும், தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலும் உள்ளதுமான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், உச்சநீதிமன்றம் அனுமதித்த 142 அடியை நெருங்கும்போது விநாடிக்கு அதிகபட்சமாக சுமார் 21 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் கேரளத்தின் இடுக்கி அணைக்கும், சுமார் 2300 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கும் திறந்து விடப்பட்டது.
 கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரே காரணம் என அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே, இயற்கை இடர்பாட்டை தவிர்க்க பேரிடர் மேலாண்மை உப குழுவின் ஆலோசனைப்படி அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 விவசாயிகள் அதிருப்தி
 அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த பிறகு அதே ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மட்டுமே அந்த அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தும் வாய்ப்பு ஏற்பட்டது. அதையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பருவ மழை போதிய அளவு பெய்து அணை நீர்மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனையும் பயன்படுத்த முடியாமல் நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்தது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 வறட்சிப் பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை வளமாக்க கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்த வேண்டியது அவசியம். இப்போது, கேரளத்தின் வெள்ளத்தை சுட்டிக்காட்டி, அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்தது தற்காலிகமானதுதான் என்றாலும், வரும் ஆண்டுகளில் பருவ மழைக் காலங்களில் இதையே கேரள அரசு முன்னுதாரணமாகக் கொண்டு நீர்மட்டத்தை 142 அடிக்குக் கூட உயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கலாம். மேலும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் நடவடிக்கைக்கு இது பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடம் எழுந்துள்ளது. அந்த நிலை ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்தில் சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக போராடி பெற்ற வெற்றிக்கு பொருள் இல்லாமல் போய்விடுவதோடு, மீண்டும் சட்டப் போராட்டம் நிகழ்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறுகின்றனர்.
 எனவே, அணையில் தேங்கும் நீரை முழுமையாக தமிழ்நாட்டுக்கு திருப்பிவிட்டு பயன்படுத்திக் கொள்ளவும், கேரளத்தின் வெள்ள அபாயத்தை தடுக்கவும் இரண்டாவதாக ஒரு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இப்போது அணையிலிருந்து 1920 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை மூலம் அதிகபட்சம் விநாடிக்கு சுமார் 2300 கன அடி வீதம் மட்டுமே நீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இரண்டாவது சுரங்கப் பாதை அமைத்தால் கூடுதலாகத் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து வைகை அணையில் நிரப்பி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 தீர்ப்பில் ஆலோசனை
 நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே, அணையிலிருந்து நீரை அதிகமாகவும், வேகமாகவும் வெள்ளியேற்ற ஏதுவாக தமிழக அரசு 2ஆவது சுரங்கப் பாதை அமைக்கலாம் என்றும், அப்படி அமைத்தால் அணையில் அதிகமான தண்ணீர் பெருகும்போது கேரள மக்களுக்கு ஏற்படும் அச்சம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அணை நீரை பயன்படுத்தும் தமிழக அரசே அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 ஆண்டுகள் ஆகியும் 2-ஆவது சுரங்கப் பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தீர்ப்பு வந்த உடன் அதற்கான பணிகளைத் தொடங்கி இருந்தால் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவதை தடுத்திருக்க முடியும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 கேரள அரசு சம்மதிக்குமா?
 முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 2-ஆவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கேரள அரசு ஒப்புக் கொள்வது கடினம். இடுக்கி அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான நீரை அங்கு கொண்டு செல்லவே முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கூறி சிக்கலை ஏற்படுத்துகின்றனர். ஆதலால், தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீரை கொண்டு செல்ல கேரள அரசு சம்மதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
 ஆனால் இப்போதைய வெள்ளத்தையும், ஏற்கெனவே உள்ள நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் 2-ஆவது சுரங்கப் பாதை திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக நீர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 "இரண்டாவது சுரங்கப் பாதை திட்டத்துக்கு கேரள அரசு எளிதில் ஒப்புக் கொள்ளாது என்றபோதிலும், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வெள்ள சூழ்நிலையை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி 2-ஆவது சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையாக இருக்காது. இரு மாநிலங்களின் வாழ்வாதார பிரச்னையை சுட்டிக்காட்டி, மத்திய அரசிடமே நிதியுதவி கோர முடியும்'' என்கிறார் தேசிய நீர்வழிச் சாலைத் திட்ட தலைவர் ஏ.சி. காமராஜ்.
 - ப. இசக்கி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com