அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 2 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
Dearness Allowance
Dearness Allowance


தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு 2 சதவீத அகவிலைப் படியை உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை ஜூலை 1-ஆம் தேதி முதல் கூடுதல் தவணையாக இரண்டு சதவீதம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இப்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தி அளிக்கப்படும்.
யார், யாருக்கு எவ்வளவு?: அகவிலைப்படி உயர்வானது, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஊதிய விகிதங்களின் கீழ்வரும் அலுவலர்கள், அரசு மற்றும் உதவி பெறும் பலவகை தொழில்நுட்பப் பயிற்சி பள்ளிகள், சிறப்புப் பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரையிலும் ஊதியத்தில் உயர்வு கிடைக்கும்.
எவ்வளவு செலவு?: சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் சம்பளம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவுத் திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள், எழுத்தர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
கூடுதல் தவணை அகவிலைப்படியானது ஜூலை, ஆகஸ்ட் வரையிலான காலத்துக்கு நிலுவையாகவும், செப்டம்பர் மாதம் முதல் ஊதியத்துடனும் அளிக்கப்படும். அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com