நிலக்கரி தட்டுப்பாடு: மத்திய எரிசக்தித் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் அமைச்சர் பி.தங்கமணி

தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை உடனடியாக வழங்க வலியுறுத்துவதற்காக, மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை,
நிலக்கரி தட்டுப்பாடு: மத்திய எரிசக்தித் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் அமைச்சர் பி.தங்கமணி


தமிழகத்துக்கு தேவைப்படும் நிலக்கரியை உடனடியாக வழங்க வலியுறுத்துவதற்காக, மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தில்லியில் செவ்வாய்க்கிழமை (செப்.18) சந்தித்து பேசவிருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை மின்தேவை அதிகரித்து 14,300 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், 1,000 முதல் 1,500 மெகாவாட் வரை மின்பயன்பாடு இப்போது குறைந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை பெய்ததால் மின்பயன்பாடு சற்று குறைந்துள்ளது. மேலும் புறநகர் பகுதிகளில் மின் கேபிள்கள், மின்கம்பங்கள் ஆங்காங்கே சேதமடைந்ததால், அப்பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதால் புனல் மின்சாரமும் ஓரளவு கைகொடுத்து வருகிறது. அதேவேளையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மின்தேவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. அப்போது அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும். ஆனால் தற்போது சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கே நிலக்கரி கையிருப்பு உள்ளது.
இதனால் மின்தேவை அதிகரிக்கும்பட்சத்தில், தேவைப்படும் மின்சாரத்தை உடனடியாக தனியாரிடம் இருந்து வாங்க இயலாது.அதற்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் முறையாக டெண்டர் கோரப்பட்டு, முடிவு செய்யப்பட்ட பிறகே தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும். மேலும் காற்றாலை மின்சாரமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
இன்று சந்திக்கிறார்: இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்குத் தேவைப்படும் நிலக்கரியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்த மாநில மின்துறை அமைச்சர் பி.தங்கமணி திங்கள்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் மாநில எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோரும் சென்றுள்ளனர்.
மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் அவர்கள் தமிழகத்தில் மின்உற்பத்திக்கு நாள்தோறும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதை எடுத்துரைக்க உள்ளனர். அதாவது தற்போது சரக்கு ரயில் மூலம் 12 வேகன்களில் வரும் நிலக்கரி அளவை 16 வேகன்களாக அதிகரித்து அனுப்ப வேண்டும் என மத்திய எரிசக்தி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம், அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் வலியுறுத்த உள்ளனர். 
முதல்வர் தலைமையில் ஆய்வு: இதற்கிடையே மாநிலத்தின் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com