புழல் சிறையில் இருந்து 8 காவலர்கள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

சென்னை புழல் சிறையில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட சில கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரத்தில்
புழல் சிறையில் இருந்து 8 காவலர்கள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்


சென்னை புழல் சிறையில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட சில கைதிகள் சொகுசாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரத்தில், 8 காவலர்களை வேறு சிறைகளுக்கு மாற்றி சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த விவரம்: புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும், சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கைக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சிறைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். 
சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினார். இச் சோதனைக்கு பின்னர், கடந்த 14, 15-ஆம் தேதிகளில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறைப் பகுதிக்குள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 20 டி.வி.க்கள், மிக்ஸிகள், பழச்சாறு பிழியும் கருவி, சமையல் பாத்திரங்கள், வெளிநாட்டு சிகரெட், திரைச் சீலைகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தண்டனைச் சிறையில் ஏ பிரிவில் அடைக்கப்பட்டிருந்த முகம்மது ரிகாஸ், முகம்மது ரபீக், முகம்மது இப்ராஹிம், முகம்மது ஜாகீர், ரபீக் என்ற நூருதீன் ஆகிய 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் காவல்துறையினரும், சிறைத்துறையினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். 
இச் சோதனையில், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. காவல்துறையுடன் சிறைத்துறை இணைந்து 4 மத்திய சிறைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது இதுவே முதல் முறை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கசிந்த தகவல்: இந்த சோதனை குறித்து சனிக்கிழமை மாலையே சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அதிகாரிகள், தங்களது அரவணைப்பில் உள்ள கைதிகளிடம் சோதனை குறித்த தகவலை உடனே தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இத் தகவல் சோதனை நடைபெற்ற 4 சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம் வேகமாக பரவியது. இதன் விளைவாக சிறைத்துறை விதிகளை மீறி வைத்திருந்த செல்லிடப்பேசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை வைத்திருந்த கைதிகள், அதை எளிதாக மறைத்து வைத்துவிட்டனராம்.
இக் காரணத்தால் சோதனை நடைபெற்றபோது, போலீஸாரிடம் பீடி, சிகரெட் மட்டுமே கிடைத்துள்ளன. போலீஸார் எதிர்பார்த்ததுபோல, செல்லிடப்பேசிகள், கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் எதுவும் சிக்கவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
8 பேர் பணியிட மாற்றம்: இந்த விவகாரம் தொடர்பாக புழல் தண்டனை சிறையில் பணிபுரிந்த தலைமை வார்டர் ஜி.விஜயராஜை ஊட்டி கிளைச் சிறைக்கும், டி.கணேசனை செங்கம் கிளைச் சிறைக்கும் மாற்றி திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டது.
இதேபோல முதல்நிலை வார்டர்கள் ஏ.பாவாடை ராயர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெ.ஜெபஸ்டின் செல்வகுமார் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கும், என்.சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், என்.சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும்,டி.செல்வகுமார் வேலூர் மத்திய சிறைக்கும், பி.பிரதாப்சிங் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா பிறப்பித்துள்ளார். இவர்களுக்கு சிறைகளில் முக்கியமான பணிகளை வழங்க வேண்டாம் என அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வார்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சிறைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது?
புழல் சிறையில் குறிப்பிட்ட சில கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது அத்துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையிலும், விசாரணைக் கைதிகள் சிறையிலும் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட சில கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததற்கு சில உயர் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது.
மேலும் அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் சிறைக்குள் டி.வி., செல்லிடப்பேசிகள், ரேடியோ, மிக்ஸி உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்வதற்கு வாய்ப்பில்லை என காவல் துறையினர் கூறி வருகின்றனர். ஆனால், இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சிறை வார்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிறைத் துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com