காரைக்கால்: காவிரி நீர் வராததால் கருகும் நிலையில் நாற்றங்கால்: விவசாயிகள் வேதனை

காவிரி நீர் காரைக்காலுக்கு முழுமையாக வராததால், நாற்றங்கால் நிலப்பரப்புகள் வெடித்து, பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வறட்சி நிவாரணம்
கோட்டுச்சேரி மேலவெளி பகுதியில் வறட்சியால் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காணப்படும் நாற்றங்கால்.
கோட்டுச்சேரி மேலவெளி பகுதியில் வறட்சியால் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காணப்படும் நாற்றங்கால்.


காவிரி நீர் காரைக்காலுக்கு முழுமையாக வராததால், நாற்றங்கால் நிலப்பரப்புகள் வெடித்து, பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வறட்சி நிவாரணம் தருவதற்கான பணிகளை அரசு முன்னெடுக்க வேண்டியிருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வேளாண் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காவிரி நீர் வரத் தொடங்கிய நிலையில், ஓரிரு ஆற்றில் மட்டுமே காரைக்கால் பகுதி நோக்கி தண்ணீர் வந்தது. இந்நிலையில், திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வரத்து முழுமையாக நின்றுபோனது.
காரைக்காலில் விதைப்பு செய்தவர்கள், நாற்றங்கால் தயார் செய்தவர்கள் காவிரி நீர் வரத்து இன்மையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
காரைக்கால் பகுதிக்கு நாட்டாறு, நூலாறு, திருமலைராஜனாறு, அரசலாற்றில் நீர்வரத்து திருப்தியாக இருந்தால் மட்டுமே, மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் பயனடைய முடியும். ஆனால், கடைமடைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், தமிழக விவசாயிகளே போராட்டம் நடத்திவரும் வேளையில், தமிழகத்திலிருந்து புதுவைக்கான பங்கைப் பெற முடியாமல் புதுச்சேரி ஆட்சியாளர்கள் தவித்துவருகின்றனர்.
மாவட்டத்தில் குறிப்பாக நாட்டாறு பாசனத்தைப் பயன்படுத்தி நெடுங்காடு முதல் கோட்டுச்சேரி மேலவெளி, கீழவெளி பகுதி வரை வேளாண் பணிகள் செய்வர்.
காவிரி நீர் வரத் தொடங்கிய நிலையில் ஓரிரு நாள்கள் இந்த ஆற்றில் தண்ணீர் வந்ததைப் பயன்படுத்தி நாற்றங்கால் தயார் செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கினர். தற்போது, காவிரி நீர் வரத்து நின்றுவிட்டதால், விளைநிலம் வெடித்து வருகிறது. அடுத்த ஓரிரு நாளில் பயிர் கருகத் தொடங்கிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக காரைக்கால் பிரதேச விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் செவ்வாய்க்கிழமை கூறியது:
காவிரி நீரின் உடனடி தேவை குறித்து மாவட்ட ஆட்சியரை அண்மையில் சந்தித்து வலியுறுத்தினோம். எங்களின் கோரிக்கையை ஏற்று அரசு நிர்வாகம் எடுத்த முயற்சியின் விளைவாக, திங்கள்கிழமை இரவு நாட்டாற்றில் நெடுங்காடு பகுதிக்கு மேற்கே காவிரி நீர் வந்துள்ளது. விவசாயிகள் தடுப்பு செய்யாமல், தங்களின் தேவைக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டால் கடைமடை வரை காவிரி நீர் வந்துசேரும். இதன் மூலம் கோட்டுச்சேரி பகுதியில் நாற்றங்கால்கள் காப்பாற்றப்படும். இந்த தண்ணீர் மேலும் வேகமாக வந்தால்தான் கடைமடை வரை முழுமையாக வந்துசேரும். அடுத்த ஓரிரு நாளில் முழுமையாக தண்ணீர் வந்தால் மட்டுமே நாற்றங்கால்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான வகையில் தண்ணீரை தமிழகத்திலிருந்து பெற நடவடிக்கை எடுக்குமாறு, எங்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. தற்போதைய தருணத்தில் தண்ணீர் வரவில்லையென்றால், விவசாயிகள் வேளாண் பணியைக் கைவிடவேண்டியிருக்கும். அரசு நிர்வாகமும் வறட்சி நிவாரணத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com