கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: யார் என்றே தெரியாது என்று கூறிய தோழியின் சிசிடிவி காட்சி சிக்கியது

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் யார் என்றே தனக்குத் தெரியாது என்று கூறிய சுவாதியும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோயிலுக்குச் சென்று வந்ததை சிசிடிவி காட்சியின் மூலம் நண்பர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: யார் என்றே தெரியாது என்று கூறிய தோழியின் சிசிடிவி காட்சி சிக்கியது

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் யார் என்றே தனக்குத் தெரியாது என்று கூறிய சுவாதியும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோயிலுக்குச் சென்று வந்ததை சிசிடிவி காட்சியின் மூலம் நண்பர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு போலீஸார், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உள்பட 17 பேரை கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  கடந்த ஆகஸ்ட்  30ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜின் தாய் சித்ரா, பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். ரயில் நிலைய அலுவலர் கைலாஷ் சந்த் மீனா,  கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.  இவர்களிடம் யுவராஜ் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். 

இதில் சுவாதி,  வழக்கு விசாரணையின்போது தனக்கு கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என சாட்சியம் அளித்தார்.  இந்த நிலையில்,  சுவாதியின் தாய் செல்வி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.  அவரிடம் அரசுத் தரப்பு வழக்குரைஞர் கேள்விகளைக் கேட்டு பதிலைப் பெற்றார்.  

மேலும், திருச்செங்கோடு மலைக் கோயிலிலிருந்து சிபிசிஐடி போலீஸ் தரப்பில் சேகரிக்கப்பட்ட சிசிடிவி பதிவு காட்சிகள் செல்விக்குக் காண்பிக்கப்பட்டன.  அப்போது அதில் வருவோர் ஆண், பெண் எனத் தெரிகிறது. எனினும், அவர்கள் யார் என்று தெரியவில்லை என்றார். 

தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.  கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக்ராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.  அவர் மலைக்கோயில் சி.சி.டி.வி. பதிவில் உள்ளது கோகுல்ராஜ் மற்றும் சுவாதி என்று சாட்சியம் அளித்தார். 

மேலும், கோகுல்ராஜ் மாயமானது முதல், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததது வரை கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வன், சுவாதி ஆகியோரிடம்தான் பேசிய விவரத்தையும் அவர் சாட்சியமாக அளித்தார். 

இதுபோல், பள்ளிபாளையம் ரயில்வே துணை மேலாளர் கதிரேசன்,  ரயில் ஓட்டுநர்கள் வடிவேல்,  முனுசாமி, கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் படித்த தனியார் கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.   இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com