கோயில் நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

கரூர் மாவட்டத்தில் கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரியும், திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் உத்தரவிடக்


கரூர் மாவட்டத்தில் கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக் கோரியும், திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் உத்தரவிடக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 
கரூர் மாவட்டம் வெட்டமங்கலம் புஷ்பவனநாதர் கோயிலுக்குட்பட்ட சொத்துக்களை பாதுகாக்கக் கோரி, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு பலமுறை மனு அளித்துள்ளேன். இந்த கோயிலுக்குச் சொந்தமாக 1. 24 ஹெக்டேர் புஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கோயில் பெயரிலும், மற்றொரு பகுதியை வேறு ஒருவரின் பெயரிலும், வேலாயுதம்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து இந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி திருச்சி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் கரூர் கோட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது. மேலும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com