சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார வசதி பெற்றுள்ள மலைக் கிராமங்கள்

சுதந்திரம் பெற்று சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு சூரிய மின் சக்தி மூலம் மின்சார வசதி கிடைத்துள்ளதால்
கத்திரிமலை கிராமத்தில் மின் வசதி இல்லாதபோது மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த குழந்தைகள்.
கத்திரிமலை கிராமத்தில் மின் வசதி இல்லாதபோது மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த குழந்தைகள்.

சுதந்திரம் பெற்று சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு சூரிய மின் சக்தி மூலம் மின்சார வசதி கிடைத்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, பல்வேறு மின் திட்டங்களைக் கொண்டு வந்தார். மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் புதிய மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, சி-தரவரிசையில் இருந்த தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் தற்போது பி-தரவரிசைக்கு முன்னேறியுள்ளது.

எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டப் பணிகள், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2 ஆம் அலகில் மின் உற்பத்தி, புதிய காற்றாலைகள் மூலம் அதிகரித்துள்ள மின் உற்பத்தி, தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைந்து சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல், கடலாடியில் 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்னழுத்த பூங்கா போன்ற பணிகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக ஈரோடு மாவட்டத்தில் மின் துறையில் தொடங்கப்பட்ட கட்செவி அஞ்சல் சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், சத்தியமங்கலம் வட்டம், மல்லியம்மன் துர்க்கம், தாளவாடி வட்டம், ராமர் அணை, அந்தியூர் வட்டம், கத்திரிமலை போன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் அமைந்துள்ள குக்கிராமங்களுக்குப் புதிய மின் பாதை அமைத்து மின்சாரம் வழங்க வனத் துறை அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக மின்சார வசதியின்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், மேற்காணும் 3 குக்கிராமங்களுக்கு மின் வசதி செய்வதற்கான மாற்றுத் திட்டம் ஆராயப்பட்டது. இதையடுத்து, சூரிய மின் சக்தித் திட்டம் மூலம் மின் வசதி ஏற்படுத்த அனுமதி பெறப்பட்டது.

அதன்படி, சத்தியமங்கலம் வட்டம், மல்லியம்மன் துர்க்கம் பகுதியில் 123 வீடுகளுக்கும், தாளவாடி வட்டம், ராமர் அணைப் பகுதியில் 18 வீடுகளுக்கும், அந்தியூர் வட்டம், கத்திரிமலை பகுதியில் 85 வீடுகள் உள்பட மொத்தம் 226 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி திட்டத்தின்கீழ் மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் ஒரு வீட்டுக்கு 5 வாட்ஸ் திறன் கொண்ட 3 எல்இடி பல்புகள், 12 வோல்ட், 40 ஏஎச் பேட்டரி, பேட்டரி சார்ஜ் கண்ட்ரோலர் ஆகிய சாதனங்கள் நிறுவப்பட்டு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வீட்டுக்கு தலா ரூ. 10,500 வீதம் 226 வீடுகளுக்கு ரூ. 23 லட்சத்து 73 ஆயிரம் நிதி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின்சார வசதி கிடைத்து தன்னிறைவு பெற்றுள்ளன என்றார்.

சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கிராமவாசி ராஜாமணி கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மலைப் பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு மண்ணெண்ணெய் விளக்குகள் மட்டுமே வெளிச்சம் தந்து கொண்டிருந்தன.

செல்லிடப்பேசி, மின்னணு சாதனங்கள் இயக்குவது வெறும் கனவாகவே இருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் சூரிய மின் சக்தி மூலம் கிடைத்துள்ள மின் வசதியால் கனவு நனவாகியுள்ளது என்றார்.

அந்தியூர் வட்டம், பர்கூர் அருகே கத்திரிமலை கிராமவாசி லட்சுமி கூறுகையில், பல ஆண்டுகளாக மின்சார வசதியே இல்லாமல் நெருப்புப் பந்தத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த குக்கிராமங்களுக்கு சூரிய வசதியுடன் கூடிய மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

அங்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் தகடுகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com