சென்னை பல்கலை.ஆட்சிக் குழுவில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்: யுஜிசி வழிகாட்டுதல் பின்பற்றப்படுமா?

சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு, கல்விக் குழு போன்ற நிர்வாக அமைப்புகளில் விதிகளை மீறி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டிருப்பதாக
சென்னை பல்கலை.ஆட்சிக் குழுவில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்: யுஜிசி வழிகாட்டுதல் பின்பற்றப்படுமா?


சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு, கல்விக் குழு போன்ற நிர்வாக அமைப்புகளில் விதிகளை மீறி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து யுஜிசி வழிகாட்டுதலின் படி ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மேலும் கூறியதாவது: 
யுஜிசி வழிகாட்டுதல் கூறுவதென்ன?: பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நபரை மறு பணியமர்வு செய்வதற்கான யுஜிசி வழிகாட்டுதல் 2018-இன் படி, மறு பணியமர்வு செய்யப்படும் ஓய்வு பெற்ற பேராசிரியரை கற்பித்தல், தேர்வுகளை நடத்துதல் மற்றும் ஆராய்ச்சி வழிகாட்டுதல் போன்ற கல்விப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.
ஆனால், இவ்வாறு மறுபணியமர்வு செய்யப்படும் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் கல்லூரிகளில் மட்டுமின்றி வேற எந்தவொரு அமைப்புகளிலும் நிர்வாகப் பொறுப்பிலோ அல்லது நிதி தொடர்பான பொறுப்புகளில் தொடரவோ அல்லது புதிதாக பணியமர்த்தவோ கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு (உயர் கல்வித் துறை) அரசாணை எண்.145 (6-7-2018) கூறுவதென்ன?: பேராசிரியர் ஓய்வு பெறும் வயதைப் பொருத்தவரை கல்லூரிப் பேராசிரியர்களுக்கு 58 வயது என்ற நிலையும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு 60 என்ற இப்போதைய நிலையே தொடருகிறது. இந்த வயதைத் தாண்டி மறுபணியமர்வு செய்யப்படக் கூடாது என்பதை அரசாணை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அரசாணையை சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டு, 6.7.2018 முதல் நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு: மேலும், ஓய்வு பெற்ற பேராசிரியர்களை நிர்வாகப் பணிகளில் இடம்பெறச் செய்யக் கூடாது என்பதை சென்னை உயர் நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது. 
குறிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியல் துறையில் உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வுக்கு அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் பன்னீர் செல்வத்துக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி வழிகாட்டுதலை நீதிபதிகள் சுட்டிக்காட்டி, பேராசிரியர் பன்னீர்செல்வம் தேர்வுக் குழு உறுப்பினராகத் தொடர முடியாது என உத்தரவிட்டனர்.
இவ்வாறு விதிகளும், அரசாணையும், நீதிமன்ற உத்தரவும் தெளிவாக இருக்கும் நிலையில், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி முதல்வர் ஒருவரை ஓய்வு பெற்ற பின்னரும் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தொடர துணைவேந்தர் அனுமதித்து வருகிறார். 
அதுபோல கல்விக் குழு, பேரவைக் குழு போன்ற நிர்வாக அமைப்புகளிலும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை உறுப்பினர்களாகத் தொடர அவர் அனுமதித்துள்ளார். பல்கலைக்கழக நலனை மறந்து, தனது சொந்த நலனுக்காக இதுபோன்று அவர் அனுமதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது விதி மீறல் என்பதோடு, பல்கலைக்கழக நலனையும் பாதிக்கும் செயலாகும். எனவே, ஓய்வு பெற்ற நபர்களை இந்த நிர்வாகக் குழுக்களிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்துக்குப் புதிய நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றனர்.
இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது: யுஜிசி வழிகாட்டுதல்களில் கல்வித் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை மட்டுமே சென்னைப் பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது.நிர்வாகப் பணிகளைப் பொருத்தவரை தமிழக அரசின் விதிகளையும், வழிகாட்டுதல்களையும் மட்டுமே பல்கலைக்கழகம் பின்பற்றி வருகிறது. 
யுஜிசி வழிகாட்டுதலை பல்கலைக்கழகம் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், பேராசிரியர் ஓய்வு தொடர்பான வழிகாட்டுதலை பல்கலைக்கழகப் பேரவைக் குழு ஏற்கவில்லை. எனவே, அந்த வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டிய அவசியம் பல்கலைக்கழகத்துக்கு இல்லை என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com