நோய்களை எதிர்த்துப் போராட இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நோய்களை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
மாணவிக்கு பட்டம் வழங்குகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் வே.சாந்தா, கல்லூரி தாளாளர் அ.சீனிவாசன் உள்ளிட்டோர்.
மாணவிக்கு பட்டம் வழங்குகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆட்சியர் வே.சாந்தா, கல்லூரி தாளாளர் அ.சீனிவாசன் உள்ளிட்டோர்.


நோய்களை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சிறுவாச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
விழாவில் பங்கேற்று 143 பேருக்கு பட்டங்கள் வழங்கிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது: 
125 கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில், 1,250 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவு தேசிய அளவில் இருந்தாலும், தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு 12 மருத்துவர்கள் உள்ளனர். இது, 
சர்வதேச சராசரி அளவான 800 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவுக்கு சமமானது. மருத்துவ வசதிகளில் தமிழகம் முன்னேறியுள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தேசிய சுகாதார சுயவிவர அறிக்கை 2017-இன் படி கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்த திறமையான மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நமது நாடு மிகவும் தொன்மையான, பாரம்பரியமிக்க மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ அறிவியலைக் கொண்ட தேசமாகும். மாறிவரும் பழக்க வழக்கங்களால் நோய்களும், அவற்றின் தன்மைகளும் அதிகரித்து வருகின்றன. தொற்றா நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றுநோய்களும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை . 15 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட இந்தியப் பெண்களில் 55 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்களைக் கட்டுப்படுத்த நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சுகாதார வசதிகளை மருத்துவக் காப்பீடு மூலம் பெற முடியும். இதன்மூலம் நாட்டில் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். 
இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். 
ஏற்கனவே இருக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுடன், மாநில அரசின் பொருத்தமான சுகாதார திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால், சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்த முடியும். நோய்களை எதிர்த்து போராடுவதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். 
சமூகத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகத்துக்கு சிறப்பான சேவை செய்து, பயனுள்ள வகையில் செயலாற்றுவதன் மூலம், ஒரு சமூக மாற்றத்தை உங்களால் உருவாக்க முடியும் என்றார் அவர். 
தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி, ஆளுநரின் முதன்மைச் செயலர் ஆர்.ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, கல்லூரி முதன்மையர் 
ஜெ.ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com