பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்:  கண்டிப்புடன் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

இரு சக்கர வாகன்ததில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பின்னால் இருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்:  கண்டிப்புடன் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: இரு சக்கர வாகன்ததில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக் கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதால் அண்மைக்காலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. 

தலைக்கவசம் அணிவதால் கடந்த 2016-இல் 4 ஆயிரத்து 91-ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 2017-இல் 2 ஆயிரத்து 956-ஆகக் குறைந்துள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரு சக்கர வாகனங்களின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக காவல் துறை டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல்: இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், டிஜிபி சார்பில் தலைக்கவசம் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்தார்.

அறிக்கையைப் படித்துப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கட்டாய ஹெல்மெட் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், அரசாணை அமல்படுத்தப்பட்டது குறித்து அக்டோபர் 23ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com