பெட்ரோல், டீசல் விலை உச்சம்: ஷேர் ஆட்டோ, கால்டாக்சி கட்டணம் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 வரை


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 
சென்னை போன்ற பெருநகரங்களில் அனைத்துப் பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் பயணிகளிடம் இருந்து பிரிக்க முடியாத வாகனமாக ஷேர்' ஆட்டோ மாறிவிட்டது. சென்னையில் பொதுபோக்குவரத்து வசதிகள் பல இருந்தாலும் உடனுக்குடன் சிறிது தூர பயணத்துக்கு சாதாரண, நடுத்தர மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நாடுகின்றனர்.
சென்னை நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே வருவதையடுத்து தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஒரு சில இடங்களில் ஓட்டுநர்கள் ஷேர் ஆட்டோ கட்டணத்தை ரூ.5 வரை உயர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறியது: ஏற்கெனவே வருமானம் பெரிய அளவில் இல்லாத சூழலில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. இன்னொருவரிடம் இருந்து ஷேர் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து ஓட்டி வாழ்க்கை நடத்துகிறோம். முன்பு நாளொன்றுக்கு ரூ.1,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது ரூ.500 வருமானம் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. வேறு வழியின்றி முதற்கட்டமாக ரூ.5 கட்டணம் உயர்த்தி இருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயரும் பட்சத்தில் ஷேர் ஆட்டோ கட்டணத்தை மேலும் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகளுக்கான கட்டணமும் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.10 வரை கூடுதல் கட்டணத்தை கேட்டு பெறுகிறார்கள். சில ஓட்டுநர்கள் பயணத்துக்கு முன்பே கூடுதல் கட்டணத்தை உறுதிசெய்து கொண்ட பிறகே பயணிகளை ஏற்றுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com