பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: ஷேர் ஆட்டோக்களிலும் வந்தது கட்டண உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதுவரை வாகன ஓட்டிகளை மட்டுமே பாதித்து வந்த நிலையில், தற்போது ஷேர்  ஆட்டோக்களில் செல்வோரின் பாக்கெட்டையும் பதம்பார்க்க ஆரம்பித்துவிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதுவரை வாகன ஓட்டிகளை மட்டுமே பாதித்து வந்த நிலையில், தற்போது ஷேர்  ஆட்டோக்களில் செல்வோரின் பாக்கெட்டையும் பதம்பார்க்க ஆரம்பித்துவிட்டது.

சென்னையில் பொதுப் போக்குவரத்துக்கு ஈடாக பொதுமக்கள் நம்பியிருப்பது ஷேர்  ஆட்டோக்களைத்தான். கிட்டத்தட்ட பேருந்து கட்டணத்தில் தேவைப்படும் இடத்தில் இறங்கிக் கொள்ளும் சலுகையோடு பயணித்த பயணிகளுக்கும் தற்போது சிக்கல் வந்துவிட்டது.

அதாவது, இதுவரை குறைந்தபட்ச ஷேர் ஆட்டோக் கட்டணம் 10 ஆக இருந்த நிலையில் இனி குறைந்தபட்ச ஷேர் ஆட்டோக் கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல அனைத்து வழித்தடங்களுக்கும் ரூ.5 உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுவது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தான். அதாவது கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57. ஆனால் தற்போது 72 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை எங்களது ஒரு நாள் வருவாய் ரூ.600 முதல் 800 வரை இருக்கும். ஆனால் தற்போது விலை உயர்வால் வருமானம் ரூ.300 ஆகக் குறைந்துவிட்டது. எங்களது அத்தியாவசியத் தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்கிறார் முகப்பேர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கணேசன்.

போக்குவரத்துக் காவலர்களின் புள்ளி விவரப்படி, சென்னையில் மட்டும் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அதில் 10 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள்.

டாடா மேஜிக் எனப்படும் ஷேர் ஆட்டோக்கள் சுற்றுலா உரிமம் மட்டுமே பெற்றுள்ளன. அவற்றை பேருந்து நிலையங்களில் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்க முடியாது. அதற்காகவே போக்குவரத்துக் காவலர்களுக்கு தினந்தோறும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அபராதமாக ஒரு தொகையை கட்டிவிடுகிறார்கள்.

சுமார் 80 சதவீத ஆட்டோக்கள் வாடகைக்கு எடுத்தே ஓட்டப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ரூ.1000 முதல் 1,500ஐ வாடகையாக செலுத்த வேண்டும். வீட்டுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை எடுத்துச் செல்ல முடியும் என்கிறார் மற்றொரு ஓட்டுநர் ஷண்முகம்.

தி.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்டவை அதிக கூட்ட நெரிசலோடு  பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் இருந்து வேலைக்குச் செல்வோருக்கு ஷேர் ஆட்டோக்கள்தான் வரப்பிரசாதம்.

மாநகரப் பேருந்துக் கட்டணம் இந்த ஆண்டின் துவக்கத்தில் உயர்த்தப்பட்ட போதும், ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. உதாரணமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருந்து அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்துக்கு சொகுசு பேருந்தில் சென்றால் ரூ.11 முதல் ரூ.13 வரை டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஷேர் ஆட்டோக்களில் வெறும் ரூ.10 தான். இதே போல பல பகுதிகளில் மாநகரப் பேருந்து கட்டணத்தை விடவும் குறைவானக் கட்டணத்திலேயே ஷேர் ஆட்டோக்கள் இதுவரை இயக்கப்பட்டு வந்தன.

சென்னை நகரில் 256 பேருந்து போக்குவரத்து வழித்தடங்கள் உள்ளன. இதே வழித்தடங்களில்தான் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. ஏராளமான பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களில் பயணிப்பதால் போக்குவரத்துக் காவலர்களும் இவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை.

தற்போதைய மக்கள் தொகைக்கு இப்போது இயக்கப்படும் 3,100 பேருந்துகள் போதாது. கூடுதலாக 2000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டியது அவசியம் என்றாலும், அந்த பற்றாக்குறையை ஷேர் ஆட்டோக்கள்தான் ஓரளவுக்குத் தீர்த்து வருகின்றன.

எப்படி இருந்தாலும், ஷேர் ஆட்டோக்களின் கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்கவே செய்யும். தினமும் 30 அல்லது 40 ரூபாய்க்கு பயணித்து வந்த பொதுமக்கள் தற்போது ரூ.50 வரை செலவிட வேண்டியது வரும் என்பதால், ஏற்கனவே அவர்களை அழுத்தும் விலைவாசி உயர்வுடன் இந்த கட்டண உயர்வும் அவர்களை கவலையடையவே செய்துள்ளது. என்றாலும் மாற்று வழிகள் ஏதும் இல்லாததால், கவலையையும் ஷேர் செய்து கொண்டு வழக்கம் போலவே பயணித்துத்தானே ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com