சம்பா பயிர்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி சாலை மறியல்

கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருவாரூர் அருகே சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருவாரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருவாரூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.


கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருவாரூர் அருகே சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
திருவாரூர் அருகே உள்ள மாங்குடி, திருநெய்ப்பேர், குன்னியூர், வடகரை, ஆத்தூர், கூடூர், கல்யாணமகாதேவி, புதுப்பத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால், இப்பயிர்களைக் காப்பாற்ற பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்க வேண்டும் எனஅதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும் இதுவரை பாசன வாய்க்கால்களில் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், திருவாரூர் மாங்குடி பாண்டவையாறு பாலத்தின் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இப்போராட்டம் காரணமாக திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பின்னர், இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கூறியது:
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஜூலை 19- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, செப். முதல் வாரத்தில் 135 நாள் உடைய நடுத்தர விதை ரகங்களைப் பயிரிடும்படி அரசு பரிந்துரைத்தது. இதனால், பல இடங்களில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கினர். தற்போது தண்ணீர் இல்லாததால், முளைத்தப் பயிர்கள் கருகி வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com