சுற்றுப்புறத்தைத் தூய்மையாக பராமரிப்பது அவசியம்: தமிழக ஆளுநர்

சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது அவசியம். அவ்வாறு பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் தமிழக ஆளுநர்
தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு ரதத்தைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு ரதத்தைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.


சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது அவசியம். அவ்வாறு பராமரிப்பதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
அரியலூர் காமராஜர் திடலில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது: 
அனைத்து தரப்பினரும் அரியலூர் மாவட்டத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். வீடு திரும்பியவுடன் வீட்டை துப்புரவு செய்ய வேண்டும். பின்னர், தெரு, கிராமம், மாவட்டம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் ஈடுபட வேண்டும். தமிழகத்திலேயே சுத்தமான மாவட்டம் எனும் பெயரை அரியலூர் மாவட்டம் பெற வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதன் மூலம் காலரா, மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு தொற்றுநோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.
தொடர்ந்து அவர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகள் தயாரிக்க ஓவர் லாக் தையல் இயந்திரமும், ரூ.2.20 லட்சம் மதிப்பிலான வங்கி வரைவோலையையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர், தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ரதத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பின்னர் சுகாதாரத் துறையின் சார்பில் இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளையில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியை தொடக்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காட்டுப் பிரிங்கியம் கிராம தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உள்ள இ-சேவை மையம் மற்றும் நியாய விலைக் கடையில் பொது விநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தினை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, வளர்ச்சித் துறை சார்பில் ரெட்டிபாளையத்தில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிக்கப்பட்டு, அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 
ரெட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரியலூர், திருமானூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியங்களில் தூய்மை பாரதம் இயக்கம் சிறப்பாக செயல்படுத்திய சிறந்த ஊக்குநர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், தூய்மை இந்தியா குறித்து மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். முன்னதாக அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் கோரிக்கை மனுக்களை ஆளுநர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஷ்வரி உட்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com