செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு: மத்திய அரசின் முடிவுக்கு அன்புமணி கண்டனம்

செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மருத்துவம், பல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய படிப்புகளைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் இளம் அறிவியல் செவிலியர் (பி.எஸ்சி., நர்சிங்) படிப்புக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும்தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் எந்த வகையிலும் மேம்படவில்லை. 
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்பதற்காக தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் சுமார் 10 லட்சம் பேர் அவர்களது பள்ளிகளின் மூலமாகவே முன்னணி பயிற்சி நிறுவனங்களிடம் பயிற்சி பெறுகின்றனர். இந்த வகையில் மட்டும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கணக்கிட்டால் இது லட்சம் கோடியைத் தாண்டி விடும்.
மருத்துவம் தவிர மற்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வை அறிமுகம் செய்தால், இதை மேலும் பல மடங்காக பெருக்க முடியும். இந்த வருவாய் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி வைத்துள்ளன. இவற்றுக்கு தீனி போடுவதற்காகத் தான் நீட் விரிவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இது தவறு மட்டுமல்ல. பாவமும் கூட. தனியார் நிறுவனங்களின் வணிக லாபத்திற்காக ஊரக, ஏழை மாணவர்களின் செவிலியர் கல்வி கனவுகளை சிதைத்து விடக்கூடாது.எனவே, செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com