தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மறைவு

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தமிழறிஞருமான கி.த.பச்சையப்பன் (82) சென்னையில் வியாழக்கிழமை (செப். 20) காலமானார்.
கி.த.பச்சையப்பன்.
கி.த.பச்சையப்பன்.


சுதந்திரப் போராட்டத் தியாகியும், தமிழறிஞருமான கி.த.பச்சையப்பன் (82) சென்னையில் வியாழக்கிழமை (செப். 20) காலமானார்.
புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள இல்லத்திலிருந்து, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கு விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை சென்ற போது, அங்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
தலைமை ஆசிரியர்: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் கி.த.பச்சையப்பன். பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற வேண்டும் என்பதற்காகப் போராடியவர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர். பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர். தனித்தமிழ் மீது தீராதப் பற்றுடையவர். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர்.
தனித் தமிழ்ச் சொற்கள்: தமிழாசிரியர் கழகத்தில் மாநிலப் பொறுப்பாளராக நீண்ட காலம் செயல்பட்டார். தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழியக்கம்' என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். தமிழ் ஓசை' நாளிதழில் மொழி நடை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பரப்புரை, தொடர்வண்டி போன்ற பிற மொழிக் கலப்பில்லாத தனித்தமிழ் சொற்கள் பயன்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளார்.
இன்று இறுதிச் சடங்கு: தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் உடல் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நான்கு மகன்கள். அவரின் இறுதிச் சடங்கு காசிமேட்டில் உள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94445 40549.
தலைவர்கள் இரங்கல்: தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் (பாமக): தமிழர் நலனுக்காக எங்கு போராட்டம் நடைபெற்றாலும், அங்கு பச்சைத் துண்டுடன் பச்சையப்பனைப் பார்க்க முடியும். என் நெருங்கிய நண்பர். தமிழ் ஓசை' நாளிதழில் பயன்படுத்தப்பட்ட பல தமிழ்ச் சொற்கள் பெரும்பான்மையான நாளிதழ்களில் வருகின்றன. இதற்கான பெருமை அவரையே சாரும். 
வைகோ (மதிமுக): மொழிப்போராட்டத் தியாகியும், தமிழ் அறிஞரும், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கி.த.பச்சையப்பன் மறைவு பேரிழப்பாகும். 
திருமாவளவன் (விசிக): தனித் தமிழ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராய் செயல்பட்டு, தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக உழைத்த தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பிற மொழிக் கலப்பில்லாத தமிழ் உரைநடையை ஊடகங்களில் பரப்பியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. 
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பகுத்தறிவு மற்றும் தன்மான உணர்வை காலமெல்லாம் தமிழர்க்கு ஊட்டிய பச்சையப்பன் மறைவு பேரிழப்பு. தமிழீழத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். தமிழப் போராளியான அவருக்கு வீரவணக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com