தாமிரவருணி புஷ்கரம் விவகாரத்தில் முதல்வர் தலையிட கோரிக்கை

தாமிரவருணி புஷ்கரம் விழாவின்போது, இரண்டு படித் துறைகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
தாமிரவருணி புஷ்கரம் விவகாரத்தில் முதல்வர் தலையிட கோரிக்கை


தாமிரவருணி புஷ்கரம் விழாவின்போது, இரண்டு படித் துறைகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தாமிரவருணி புஷ்கரம் விழா இணை ஒருங்கிணைப்பாளர் வளசை கே.ஜெயராமன் தெரிவித்தார்.
இது குறித்து தினமணி நிருபரிடம் அவர் கூறியதாவது:- தாமிரவருணியில் புஷ்கரம் விழா 18 இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூடி புனித நீராடுவர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு: இந்த ஆண்டு புஷ்கரம் விழாவின்போது, குறுக்குத் துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படித்துறை, நெல்லையப்பர் கோயில் படித்துறை (தைப்பூச மண்டபம்) ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனக் கூறி, அந்தப் பகுதிகளில் புனித நீராட தடை விதித்து திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புஷ்கர விழாவின்போது, அப்போதைய ஆட்சியர் நான்கு முறை இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆனால், தற்போதுள்ள ஆட்சியர் ஒரு முறை மட்டுமே புஷ்கரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.
இந்த நிலையில், இந்த புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு தருவதற்குப் பதிலாக, இரண்டு படித்துறைகளில் நீராட தடை விதிப்பது என்பது ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தைப் புண்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு புஷ்கரம் விழாவின்போது, தடை விதிக்கப்பட்ட இரண்டு படித்துறைகளிலும் புனித நீராட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வளசை கே.ஜெயராமன்.
இது தொடர்பாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் வெளியிட்ட அறிக்கை: தாமிரவருணியில் நடைபெறும் புஷ்கரம் விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து உலகம் முழுவதும் தாமிரபரணியின் பெருமை, திருநெல்வேலியின் சிறப்பை கொண்டு சேர்க்க பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன் அதைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் நடக்கும் நடவடிக்கைகளை பார்க்கும்போது இது தமிழக முதல்வரின் கவனத்துக்குச் சென்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
இரு படித் துறைகள் தவிர மற்றவற்றில் நீராடலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவு குழப்பங்களை ஏற்படுத்தும்; மேலும் இது போன்று பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் போக்கை தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்துவதோடு, புஷ்கரம் விழாவை சிறப்பாக நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இராம கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com