புழல் சிறையில் சோதனை: கைதிகள் திடீர் போராட்டம்

புழல் மத்திய சிறையில் நான்காவது முறையாக வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது. அப்போது சிறையில் வழங்கப்படும் உணவு துர்நாற்றம் வீசுவதாகக் கூறி கைதிகள்
புழல் சிறையில் சோதனை: கைதிகள் திடீர் போராட்டம்

புழல் மத்திய சிறையில் நான்காவது முறையாக வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது. அப்போது சிறையில் வழங்கப்படும் உணவு துர்நாற்றம் வீசுவதாகக் கூறி கைதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புழல் மத்திய சிறையில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில கைதிகளுக்கு சொகுசாக வாழ்வதற்கு வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் புகைப்படங்களுடன் தினமணி நாளிதழில் கடந்த 10-ஆம் தேதி செய்தி வெளியானது. இச்செய்தியின் எதிரொலியாக, சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, புழல் சிறையில் கடந்த 13-ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினார்.
இதையடுத்து, கடந்த 14, 15 தேதிகளில் புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 20 டி.வி., மிக்ஸி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 5 கைதிகள் வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
அடுத்து கோயம்புத்தூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் காவல் துறையினரும் சிறைத் துறையினரும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.16) திடீர் சோதனை நடத்தி, பீடி, சிக ரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
புழல் மத்திய சிறையில் இருந்து 17 சிறைக் காவலர்கள் வேறு சிறைகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், இந்து இயக்கத் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையின் கண்டம்' என்ற பகுதியில் அடைக்கப்பட்டிருக்கும் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் அறைகளில் இருந்து 2 டி.வி.க்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நான்காவது முறையாக: இந்நிலையில், புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதி சிறைப் பகுதியில், அச்சிறையின் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் காவலர்கள் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை சிறையின் அனைத்துப் பகுதியிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், பெரியளவில் எந்தப் பொருள்களையும் சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்யவில்லை.
ஏனெனில் இச்சோதனை குறித்து புதன்கிழமை மாலையே சிறைத் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், தாங்கள் லஞ்சம் வாங்கும் கைதிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் சமூக விரோதச் செயலில் ஈடுபடும் கைதிகளிடம் பரவியதால், அவர்கள் தாங்கள் வைத்திருந்த பொருள்களை பதுக்கியும், வெளியே தூக்கி எறிந்தும் விட்டதாக கூறப்படுகிறது. இதனாலேயே சோதனையில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என சிறைத் துறையினர் தெரிவித்தனர்.
கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இதற்கிடையே விசாரணை சிறைப் பகுதியில் 2, 3, 4, 5 தொகுதிகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் திடீரென காலை உணவை வாங்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் உணவு துர்நாற்றம் வீசுவதாகவும், உணவில் கழிவு பிளாஸ்டிக் பொருள்கள், கல், மண் ஆகியவை இருப்பதாகவும், உணவு சாப்பிடக் கூடிய தரத்தில் இல்லை எனவும், கைதிகளைக் காண வரும் அவர்களின் குடும்பத்தினரிடம் சில சிறைக் காவலர்கள் அவதூறாக பேசுவதாகவும், ஒரு காவலர் பெண்களிடம் தவறாக பேசுவதாகவும் கூறி கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், சிறை அலுவலர் உதயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளைச் சந்தித்து, தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கைதிகளின் குடும்பத்தினர், பெண்கள் ஆகியோரிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொள்ளும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை அடுத்து கைதிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

திருச்சி மத்திய சிறையில் ஆய்வு
திருச்சி, செப். 20: திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்கள் உள்ளனவா என போலீஸார் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 
காவல் உதவி ஆணையர் ஜான்சிராணி தலைமையில் சுமார் 30 போலீஸார் கொண்ட குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதில், சிறையின் அனைத்து அறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. காந்திச்சந்தை பகுதியில் உள்ள மகளிர் சிறையிலும் 15 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் குறிப்பிடும்படியான எந்தப் பொருள்களும் சிக்கவில்லை.
சோதனை குறித்து திருச்சி (மத்திய சிறை) டி. ஐ. ஜி . சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த ஆய்வு மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைதான் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com