முட்டைக்கு வாரத்தில் 3 நாள்கள் விலை நிர்ணயம்: கோழிப் பண்ணையாளர்கள் வலியுறுத்தல்

வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே முட்டை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 3 நாள்கள் மட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை மீதமுள்ள நாள்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டைக்கான விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒவ்வொரு வாரமும் பழைய முறைப்படி திங்கள்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளார். 
இதனிடையே, கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கை குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவர் பி.செல்வராஜ் கூறியது: முட்டைக்கான விலையை தினசரி நிர்ணயம் செய்வதன் மூலம் இனிவரும் காலங்களில் முட்டை வியாபாரமானது சுமுகமாக நடைபெறும். 
பண்ணையாளர்கள் முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 25 காசுகளுக்கு மேல் குறைத்துக் கொடுக்காமல் இருந்தால், முட்டை விலையை அதிகரிக்கவும், சுமுகமாக வியாபாரம் நடத்தவும் முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com