முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக அமையும்: ராமதாஸ்

மத்திய அரசு பிறப்பித்துள்ள முத்தலாக் முறையைத் தடை செய்யும் அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும் என்று பாமக நிறுவனர்

மத்திய அரசு பிறப்பித்துள்ள முத்தலாக் முறையைத் தடை செய்யும் அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைக்கு எதிராக முத்தலாக் முறை அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை. அதனால்தான் முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டிலும் முத்தலாக் என்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பது ஏன்?
கண்ணியம், கெளரவம், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில்தான் இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்து விட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி, புதிய சட்ட முன்வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com