வாகனங்களில் அவசர கால வழியில் இருக்கைகள்: போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனங்களில் அவசர கால வழி உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக போக்குவரத்துத்துறை
வாகனங்களில் அவசர கால வழியில் இருக்கைகள்: போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு


மோட்டார் வாகனச் சட்டப்படி வாகனங்களில் அவசர கால வழி உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த வழக்குரைஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 
தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 1989-இன் படி ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள பயணிகள் வாகனத்தில் அவசர கால வழி இருக்க வேண்டும். தற்போது பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள், அரசு வாகனங்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அனைத்திலும் அவசர கால வழி உள்ளது. அந்த வழி எங்குள்ளது என்று வாகனத்தில் எழுதியும் உள்ளனர். 
ஆனால் அவசர கால வழி உள்ள இடத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு போக்குவரத்து அலுவலர் அனுமதி கொடுத்துள்ளார். இது போன்று அவசர கால வழி உள்ள இடத்தில் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால் வாகன விபத்து ஏற்படும் போது பயணிகள் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். கடந்த 2016-இல் சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்து தீப்பிடித்ததில் பயணிகள் பலர் இறந்தனர்.
எனவே மோட்டார் வாகனச் சட்டம்1989-இன் படி ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்களில் அவசர கால வழி உள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளை அகற்ற உத்தரவிட வேண்டும். 
இந்த இருக்கைகள் அகற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய வாகனங்களுக்கு அனுமதி கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com