திமுகவில் வாரிசு அரசியல்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. அங்கு சாதாரண தொண்டனால் தலைவராக முடியாது. அங்கு மகன், மகள், பேரன் ஆகியோரைத் தவிர வேறு யாரும் பெரிய பதவிக்கு
தூத்துக்குடியில் தன்னை வரவேற்கத் திரண்டிருந்த கூட்டத்தில் நின்ற சிறுமியிடம் கை குலுக்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தூத்துக்குடியில் தன்னை வரவேற்கத் திரண்டிருந்த கூட்டத்தில் நின்ற சிறுமியிடம் கை குலுக்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.


திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. அங்கு சாதாரண தொண்டனால் தலைவராக முடியாது. அங்கு மகன், மகள், பேரன் ஆகியோரைத் தவிர வேறு யாரும் பெரிய பதவிக்கு வர முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை (செப். 22) நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
பின்னர், அங்கிருந்து திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்ற முதல்வருக்கு பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகர் பகுதியில் திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வருக்கு அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் தச்சை கணேசராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்தி முருகேசன், விஜிலா சத்தியானந்த், சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் ஆகியோரும் வரவேற்றனர்.
அதன்பிறகு பெரும் திரளாக கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: இங்கே சாலையின் இருபுறமும் நின்று மக்கள் என்னை வரவேற்றதை ஒருபோதும் மறக்க முடியாது. 
மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்; அதிமுகவை அழிக்க வேண்டும் என தீயசக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி கண்டோம். அதேபோன்ற வெற்றியை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் பெற வேண்டும். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் கேட்டுப் பெற முடியும். நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும்.
இங்கு அனைத்து எதிர்க்கட்சியினரும் நமது அரசை எதிர்க்கிறார்கள். அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும்; கட்சியை உடைக்க வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பலம் பொருந்திய இயக்கமாக உள்ளது. 
எம்ஜிஆரால் நாட்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. இந்தக் கட்சியில் சாதாரண விவசாயி மகனும் முதல்வராக முடியும். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நபர்தான். ஆனால் திமுகவில் சாதாரண தொண்டனால் தலைவராக முடியுமா? அங்கு மகன், மகள், பேரன் ஆகியோரை தவிர்த்து வேறு யாரும் பெரிய பதவிக்கு வர முடியாது. திமுகவில் நடப்பது வாரிசு அரசியல். ஒட்டுமொத்த ஊழலின் உருவம் திமுக. ஆனால், அதன் தலைவராக உள்ள ஸ்டாலின் இப்போது திட்டமிட்டு அதிமுக அரசுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com