நடிகை வனிதா மீதான வழக்கு: 7 பேர் கைது

வீட்டை அபகரிக்க முயன்றதாக நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா மீது மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நடிகை வனிதா மீதான வழக்கு: 7 பேர் கைது

வீட்டை அபகரிக்க முயன்றதாக நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா மீது மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமார் குடும்பத்துக்குச் சொந்தமாக மதுரவாயல் ஆலப்பாக்கம் அருகே உள்ள அஷ்டலட்சுமிநகர் 19-ஆவது தெருவில் ஒரு வீடு உள்ளது. இந்த வீடு யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜயகுமார், சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தனது மகள் வனிதா திரைப்பட படப்பிடிப்புக்கு அந்த வீட்டை சில வாரங்களுக்கு முன்பு தன்னிடமிருந்து வாடகைக்கு எடுத்ததாகவும், திரைப்பட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் அந்த வீட்டை காலி செய்யாமல் இருந்து வருவதாகவும், வனிதாவை காலி செய்யக் கூறிய பின்னரும், அவர் தகராறு செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.
7 பேர் கைது: அந்த புகார் மனுவின் அடிப்படையில் மதுரவாயல் போலீஸார் விசாரணை செய்தனர். இதையடுத்து போலீஸார் வனிதா மீதும், அவருடன் இருந்தவர்கள் மீதும் 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 
மேலும் அந்த வீட்டில் இருந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வே.நரேந்திரன் (45), மா.ஆண்ட்ரூஸ் (45), வடபழனியைச் சேர்ந்த அ.ஜோசப் மனோஜ் (43), திருவேற்காட்டைச் சேர்ந்த தி.பாலா (46), சைதாப்பேட்டையைச் சேர்ந்த த.சத்தியசீலன் (37), நெற்குன்றத்தைச் சேர்ந்த வை.தியாகராஜன் (40), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செ.மணிவர்மா (53) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அந்த வீட்டில் இருந்த வனிதாவையும், அந்த வீட்டு ஊழியர்களையும் வெளியேற்றி போலீஸார், வீட்டுக்குப் பூட்டுப் போட்டனர்.
வனிதா புகார்: இதற்கிடையில் நடிகை வனிதா, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவர் கூடுதல் ஆணையர் தினகரனை சந்தித்து, ஒரு புகார் அளித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆலப்பாக்கத்தில் உள்ள அந்த வீடு, எனது தாயார் மஞ்சுளா பெயரில்தான் உள்ளது. அந்த வீடு வாங்கியதில் எனது வருமானமும் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால், எனது தந்தை விஜயகுமார் காவல்துறை மூலம் என்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றி உள்ளார். 
இப்பிரச்னையில் சட்டவிதிமுறைகளை மீறியும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் மதுரவாயல் போலீஸார் என்னை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி, என்னுடன் இருந்தவர்களை கைது செய்துள்ளனர். எனவே மதுரவாயல் போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com