பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் திராட்சை சாகுபடி சேர்க்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வரும் விவசாயிகள், திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் திராட்சை சாகுபடி சேர்க்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வரும் விவசாயிகள், திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழகத்தில் அதிக அளவில் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுக்கு 22 ஆயிரத்து 500 டன் திராட்சை உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.150 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் நிலவும் தட்ப வெப்ப நிலை, மண் மற்றும் நீரின் தன்மையால் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், இங்கு ஆண்டுக்கு 3 முறை திராட்சை அறுவடை நடைபெறுகிறது. விவசாயிகள் சுழற்சி முறையில் அறுவடை பருவத்தை நிர்ணயித்து சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், மகாராஷ்டிரத்தில் இருந்து திராட்சை வரத்து இல்லாத ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை, சந்தையில் தனியிடம் பிடிக்கும்.
 கம்பம் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் திராட்சை திருச்சி, சென்னை, பெங்களூரு, கேரளம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப் படுகிறது.
 நலிவடையும் திராட்சை விவசாயம்: கடந்த சில ஆண்டுகளாக வேலை ஆள்கள் பற்றாக்குறை, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலையேற்றம் ஆகியவற்றால் திராட்சை விவசாயம் நலிவடையத் தொடங்கியுள்ளது. இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றம் மற்றும் பயிர்களில் ஏற்படும் நோய் தாக்குதலால் திராட்சை மகசூல் பாதித்து, கடும் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள் திராட்சை விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர்.
 பணப் பயிர் சாகுபடியான திராட்சை விவசாயத்திற்கு அரசு சார்பில் போதிய மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுவதில்லை. சொட்டு நீர் பாசனம் திட்டத்தை தவிர வேறு எந்தத் திட்டத்திலும் திராட்சை சாகுபடிக்கு அரசு சார்பில் மானியம் வழங்குவதில்லை. திராட்சை உற்பத்தியில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய செலவினமாக உள்ளது. ஆனால், திராட்சை பயிருக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசு மானிய விலையில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுவதில்லை. தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலை கொடுத்து உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 இந்த நிலையில், தோட்டப் பயிரான திராட்சை சாகுபடியை பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காததால் விவசாயிகள் மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.
 இது குறித்து சுருளிப்பட்டி திராட்சை விவசாயிகள் சங்கத் தலைவர் கி.முகுந்தன் கூறியது: திராட்சை விவசாயத்திற்கு பந்தல் அமைப்பு, இளங்கொடி வளர்ப்பு ஆகியவற்றுக்கு அரசு சார்பில் மானியம், பயிர் கடன் வழங்க வேண்டும். தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் திராட்சை பயிருக்கு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
 தற்போது, அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் காப்பீட்டுத் திட்டத்திலும் திராட்சை சாகுபடி சேர்க்கப்படவில்லை. இதனால் இயற்கை சீற்றம், பருவநிலை மாற்றம், நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும் என்ற குறைந்தபட்ச உத்தரவாதம் கூட இல்லாமல் திராட்சை விவசாயிகள் தவிப்பில் உள்ளனர். திராட்சை விவசாயத்தை பாதுகாப்பதற்கு திராட்சை சாகுபடியை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com