வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி: தனியாரை அனுமதிக்க வலியுறுத்தல்

கட்டுமானப் பணிகளுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்திட வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து, நேரடியாக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என

கட்டுமானப் பணிகளுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்திட வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து, நேரடியாக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் அரசு மணல்குவாரிகள் இயக்க திட்ட இயக்குநர் அருண் தம்புராஜுக்கு அனுப்பிய மனு விவரம்: புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தால் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 50,000 டன் மணலை, தமிழக அரசு யூனிட்டுக்கு ரூ.2,050 கொடுத்து அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இந் நிலையில், இப்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்த மணலை லாரிகள் யூனிட்டுக்கு ரூ.9,990 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அரசு மணல் குவாரிகளில் 1 யூனிட் மணல் ரூ.1,330-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இறக்குமதி மணலுக்கு 1 யூனிட் ரூ.9,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 மேலும், தூத்துக்குடியில் ரூ.9,990-க்கு வாங்கி, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றால், 1 யூனிட் ரூ.20,000-க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கட்டுமானத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். லாரி உரிமையாளர்கள், கட்டுமானத் தொழிலில் தொடர்புடையவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கவும் தமிழக முதல்வர் அறிவித்தபடி 70 மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். இப்போது நாமக்கல் மாவட்டம் குன்னிபாளையத்தில் மட்டுமே மணல் குவாரி இயங்கி வருகிறது.
 தமிழகத்தில் மணல் விலை குறைய, வெளிநாடுகளில் மணல் இறக்குமதி செய்துகொள்ள விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும். மணலின் தரத்தை மட்டும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான மணலாக இருந்தால் விற்பனைக்கு அனுமதி அளிக்கலாம். சில்லரை விற்பனையை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com