நீதிமன்ற உத்தரவு மீறல்: தேர்வுத் துறை இயக்குநருக்கு அபராதம்

நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் வழக்கு தொடர்ந்த அரசு தேர்வுத் துறை இயக்குநருக்கு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு மீறல்: தேர்வுத் துறை இயக்குநருக்கு அபராதம்

நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் வழக்கு தொடர்ந்த அரசு தேர்வுத் துறை இயக்குநருக்கு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக, ராஜேஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2005 -ஆம் ஆண்டு நடந்த பிளஸ் 2 தேர்வில் 998 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்டம் வீரச்சிபாளையத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டில் சேர்ந்து படித்து வந்தேன்.
 முதலாம் ஆண்டு முடித்துவிட்ட நிலையில், எனது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அப்போது பிளஸ் 2 தேர்வில் பாடவாரியாக நான் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கும், மொத்த மதிப்பெண்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக அரசு பொதுத் தேர்வுத் துறை இணை இயக்குநர் அறிக்கை அளித்துள்ளார்.
 இதனைத் தொடரந்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து என்னை நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
 மதிப்பெண் திருத்தம் குறித்து எனக்குத் தெரியாது, அரசு வழங்கிய சான்றிதழையே நான் சமர்ப்பித்துள்ளேன். எனவே, என்னை மீண்டும் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
 இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவிக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும், அவரை கல்லூரியில் மீண்டும் சேர்க்கவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
 நீதிமன்ற உத்தரவின்படி கல்லூரியில் சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் ஆண்டு படிப்பையும் முடித்தார். ஆனால் அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து ராஜேஸ்வரி சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், ராஜேஸ்வரியின் தேர்வு முடிவுகளை வெளியிடவும், அவரது சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட்டு, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க தேர்வுத் துறை இயக்குநருக்கு கடந்த 2010 -ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
 இந்த உத்தரவை எதிர்த்து அரசு தேர்வுத் துறை இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு, சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டார்.
 மேலும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் வழக்கு தொடர்ந்த தேர்வுத் துறை இயக்குநருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com