முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்எல்ஏ கருணாஸ் உள்பட இருவர் கைது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் உள்பட 2 பேரை நுங்கம்பாக்கம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்எல்ஏ கருணாஸ் உள்பட இருவர் கைது

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் உள்பட 2 பேரை நுங்கம்பாக்கம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
 இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் அக்.5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு எழும்பூர் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், திருவாடானை எம்எல்ஏவுமான கருணாஸ் பேசியபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
 8 பிரிவுகளின் கீழ் வழக்கு: இதைத் தொடர்ந்து கருணாஸின் பேச்சை காவல் துறையினர் ஆராய்ந்ததில், அவர் முதல்வர், காவல் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை அவதூறாகப் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கூட்டுச் சதி, வன்முறையைத் தூண்டுதல், கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின்கீழ் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி செல்வநாயகம் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த வியாழக்கிழமை (செப். 20) வழக்குப் பதிவு செய்தனர்.
 கருணாஸ் கைது: இதைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமம் வீட்டில் தங்கியுள்ள கருணாûஸ கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் கருணாஸின் வீட்டைச் சுற்றி வளைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் 6.35 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இருவரிடமும் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
 அக்.5 வரை நீதிமன்றக் காவல்: பின்னர், எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற 13-ஆவது மாஜிஸ்திரேட் கோபிநாத் வீட்டுக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நீதிபதி கோபிநாத் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கருணாஸ் உள்ளிட்ட இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள கொலை மிரட்டல் பிரிவுக்கு அவரது வழக்குரைஞர் ஆட்சேபனை தெரிவித்தார்.
 இதையடுத்து, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் பிரிவை நீதிபதி கோபிநாத் ரத்து செய்தார். இருவரையும் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 வேலூர் சிறைக்கு மாற்றம்: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாûஸ பாதுகாப்புக் கருதி வேலூர் மத்திய சிறைக்கும், செல்வநாயகம் கடலூர் மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர். இதையடுத்து, புழலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
 வழக்குப் பதிவு: கருணாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விருகம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுதொடர்பாக முக்குலத்தோர் புலிப் படை அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com