முதல்வர் பாதுகாப்பு வாகனத்தை காரில் பின் தொடர்ந்த இளைஞர்கள் 3 பேர் கைது

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பாதுகாப்பு வாகனத்தை, காரில் பின் தொடர்ந்த 3 இளைஞர்களை சாத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பாதுகாப்பு வாகனத்தை, காரில் பின் தொடர்ந்த 3 இளைஞர்களை சாத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
 விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் வந்தபோது, முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை சில நபர்கள் காரில் பின் தொடர்ந்தனர். அந்த காரை போலீஸார் வழிமறித்தும் நிறுத்தவில்லை. அதையடுத்து அந்த காரை விரட்டிப் பிடிக்க காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
 இந்நிலையில், சாத்தூரை கடந்த மர்ம நபர்களின் கார், மீண்டும் கோவில்பட்டி நோக்கிச் சென்றது. அப்போது ஓடைப்பட்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது, மர்ம நபர்களின் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
 அதையடுத்து, போலீஸார், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிமணி (25), பாலமுருகன் (29), காந்தாரிமுத்து (25) என்பதும், மூவரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, மூன்று பேரையும் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 இச்சம்பவம் குறித்து பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் பாண்டிமணி, பாலமுருகன், காந்தாரிமுத்து ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com