வங்கியில் கொள்ளை முயற்சி: பெட்டகத்தை உடைக்க முடியாததால் நகை, பணம் தப்பின

செங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

செங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். எனினும், வங்கியிலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை (லாக்கரை) உடைக்க முடியாததால், ரூ.8 கோடியிலான தங்க நகைகள், பணம் தப்பின.
 செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரம் இறையூர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் பின்புறம் வழியாக சனிக்கிழமை நள்ளிரவு வந்த மர்ம நபர்கள், வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். எனினும், பாதுகாப்புப் பெட்டகத்தை அவர்களால் உடைக்க முடியாததால், நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
 அந்தப் பகுதி வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்றவர்கள் வங்கியின் ஜன்னல் கம்பிகள் உடைந்திருப்பதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.
 இதைத் தொடர்ந்து, வங்கியின் மாவட்ட அதிகாரிகளை வரவழைத்து வங்கியில் நகை, பணம் ஏதேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என போலீஸார் ஆய்வு செய்தனர்.
 ஆய்வின்போது, வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான நகைகளும், பணமும் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதையடுத்து, விரல் ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து பாய்ச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com