வெளிநாடுகளிலிருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல்: தமிழ்நாடு மின்சார வாரியம் இ-டெண்டர்

வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் இ-டெண்டர் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல்: தமிழ்நாடு மின்சார வாரியம் இ-டெண்டர்

வெளிநாடுகளில் இருந்து 20 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் இ-டெண்டர் வெளியிட்டுள்ளது.
 தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமாக வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன. இங்கு நிலக்கரி மூலம் நாள் ஒன்றுக்கு 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். வடசென்னையில் தலா 210 மெகாவாட் திறனுள்ள 3 அலகுகளும், தலா 600 மெகாவாட் திறனுள்ள 2 அலகுகளும் உள்ளன. மேட்டூரில் தலா 210 மெகாவாட் திறனுள்ள 4 அலகுகளும், 600 மெகாவாட் திறனுள்ள ஒரு அலகும் உள்ளன. தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன.
 இவற்றுக்கு தேவைப்படும் நிலக்கரியை மத்திய அரசு மூலம் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் இருந்து மின்சார வாரியம் வாங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய நிலக்கரியை மத்திய அரசு அனுப்பவில்லை. இதனால் தமிழக அனல்மின் நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்து வந்ததால் மின் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. ஆனால், தற்போது காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதற்கேற்ப நிலக்கரி விநியோகம் இல்லை.
 இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதி, கூடுதல்நிலக்கரி வழங்குமாறு வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி, தில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு நாள்தோறும் 72,000 டன் நிலக்கரி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
 இ-டெண்டர்: இந்த நிலையில், கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் வெளிநாடுகளில் 30 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதன்படி நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான இ-டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், உலகளாவிய மின்னணு ஒப்பந்தப்புள்ளி மறுநிலை ஏலத்துடன் எண்ணூர் காமராஜர் துறைமுகம் வாயிலாக 20 லட்சம் மெட்ரிக் டன் நீராவி நிலக்கரியை எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் இறக்குமதி செய்து தரலாம். வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: வடமாநிலங்களில் அவ்வப்போது பெய்யும் கனமழையால் நிலக்கரி சுரங்கங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகின்றன. இதனால் நிலக்கரியை வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதைக் காரணம் காட்டி மத்திய அரசு அடிக்கடி நிலக்கரி அளவை குறைக்கிறது. எனவே வருங்காலங்களில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. அவர்கள் அனுமதி அளித்ததன் அடிப்படையில் தற்போது டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.1,183 கோடியில் 20 லட்சம் டன் நிலக்கரி எண்ணூர் காமராஜர் துறைமுகம் வழியாக வரும் நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com