வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை, மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது பெண் குழந்தை, மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
 வேதாரண்யம் அருகே புதுப்பள்ளி கிராமம் பிடாரிகோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சிவதர்ஷிணி(2). இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ச. அன்புச்செல்வன், பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் புதிதாக வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். இக்கட்டுமானப் பணிக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக வீட்டின் எதிரே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மதியம் நடைபெற்று முடிந்தது. சுமார் 18 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தது.
 இந்நிலையில், வீட்டுக்கு வெளியே விளையாடிய சிவதர்ஷிணி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் தலைஞாயிறு மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனக் குழுவினர் மீட்கப்பட்ட குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து, முதலுதவி செய்தனர்.
 பின்னர் அக்குழந்தையை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தையை மீட்ட தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட பணி அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டது. குழந்தை மீட்புப் பணி தீயணைப்பு துறை வீரர்கள், அவசர ஊர்தி பணியாளர்கள், பொது மக்களின் பங்களிப்புடன் 3 மணி நேரம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com