அரசு நிலங்களை ஆக்கிரமிப்போருக்கு கருணை கூடாது: உயர் நீதிமன்றம்

அரசு நிலங்களை ஆக்கிரமிப்போருக்குக் கருணை காட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலங்களை ஆக்கிரமிப்போருக்கு கருணை கூடாது: உயர் நீதிமன்றம்


அரசு நிலங்களை ஆக்கிரமிப்போருக்குக் கருணை காட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளயத்தைச் சேர்ந்த ஏ.லட்சுமணன் தாக்கல் செய்த மனு எங்களது முன்னோருக்குச் சொந்தமான நிலம் இலுப்பநத்தம் கிராமத்தில் இருந்தது. இந்நிலத்துக்கு கடந்த 1931-ஆம் ஆண்டே பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் இருந்து 0.46 சென்ட் நிலம் எனக்கு பாகப் பிரிவினை மூலம் கிடைத்தது. 
எனக்கு வழங்கப்பட்ட நிலத்துக்குப் பட்டா கேட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தேன். அந்த நிலம் புறம்போக்கு நிலம் எனக் கூறி பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே, நிலத்துக்குப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அரசு வழக்குரைஞர் வாதம்: இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ரகு, மனுதாரர் பட்டா கோரும் நிலம் கரடு புறம்போக்கு எனக் கூறி அதற்கான பதிவேட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதம்: அந்தப் பகுதியில் குன்றுகளே இல்லை; எனவே அந்த நிலத்தை கரடு புறம்போக்கு எனக் கூறுவதை ஏற்க முடியாது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கந்தன்துரைசாமி வாதிட்டார்.
நீதிபதி உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 
இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர் தன்னிடம் மொத்த நிலத்துக்கான பட்டா உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, அதிகாரிகள் அவரிடம் உள்ள பட்டாவைப் பெற்று அதன் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து, அதன் பின்னர் சட்டப்படி தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். 
அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: ஒரு சில அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைச் சரி பார்க்காமல் பட்டா வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு வழங்கப்படும் பட்டாக்களை முறையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தற்போது நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசின் புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க அரசு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு நிலத்தை அபகரிப்பது கடுமையான குற்றங்களாகும். இதை பொது மக்களின் பொதுநலன் சார்ந்தவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் நிலங்களை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
கோவை மாவட்டத்தில்...கோவை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆய்வு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்களை ஆக்கிரமிக்க எண்ணும் யார் மீதும் கருணை காட்டக் கூடாது. இது தொடர்பான சுற்றறிக்கையை மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com