தமிழகத்தில் ஆறுகளை இணைக்க எவ்வளவு காலஅவகாசம் தேவை?: அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து, தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு,
தமிழகத்தில் ஆறுகளை இணைக்க எவ்வளவு காலஅவகாசம் தேவை?: அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து, தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு, அரசு வழக்குரைஞருக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு: 
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாகப் போதுமான மழை இல்லை. நாடு முழுவதும் விவசாயம் செழிக்க அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்றில் தேவாலா என்ற இடத்தில் 15 சிறு நதிகள் சேருகின்றன. இந்த தண்ணீர் முழுவதும் தமிழகத்தில் 15 கி.மீ. தூரம் பாய்ந்து, கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் சாலியாற்றில் கலந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த ஆற்றிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 166 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தடுப்பணை கட்டி இந்த தண்ணீரை பவானி சாகர் அணையில் சேகரித்து காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 12 மாவட்டங்களுக்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோவை, நீலகிரி மாவட்ட விவசாயிகள் பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.
எனவே, ஓவேலி ஆற்றில் வரும் 166 முதல் 180 டிஎம்சி தண்ணீரை டெல்டா பகுதி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் சிறு நதிகளை இணைக்கவும், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, வேலூர் மாவட்ட ஆறுகளில் போதுமான அளவு தடுப்பணைகள் கட்டி விவசாயத்துக்குத் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.செல்வராஜூ தாக்கல் செய்த பதில் மனுவில் நீலகிரி மாவட்டத்தில் ஓவேலி ஆறு, கேரளத்தில் பாண்டியாறு, மோயாறு, புன்னம்புழா ஆறுகளை இணைப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஷாம் ஜோசப் கடந்த மே மாதம் திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக ஈரோடு பகுதியில் முதற்கட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். 
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கருப்பாநதி, செண்பகவள்ளி ஆறு உள்ளிட்ட ஆறுகளை இணைப்பது, அணை கட்டும் திட்டங்கள் குறித்து அரசிடம் அறிக்கை அளித்துள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்து, திட்டங்களை வகுத்து வருகிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் நதிகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும் என அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக். 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com